×

புதியதாக 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தது

*முதல்வருக்கு ராஜேஸ்குமார் எம்பி நன்றி

நாமக்கல் : நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி, நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, தெற்கு நகர திமுக செயலாளர் ராணா. ஆனந்த், மேற்கு நகர திமுக செயலாளர் சிவக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பியை, மாவட்ட திமுக அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி ராஜேஸ்குமார் எம்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளார். இதற்காக அனைவரது சார்பிலும், முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாமக்கல் மாநகராட்சியுடன் 12 ஊராட்சிகளை இணைக்க, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டு, அதை அரசும் ஏற்றுக்கொண்டது. அதன்படி, நாமக்கல் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய ஊராட்சிகள், நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

புதியதாக அமைய உள்ள நாமக்கல் மாநகராட்சியின் ஒட்டுமொத்த பரப்பளவு 145.31 சதுரகிலோ மீட்டராகும். கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்புபடி, நாமக்கல் நகராட்சியின் மக்கள் தொகை 1.70 லட்சமாகும். தற்போது 2023ம் ஆண்டு தோராய மதிப்பீடு படி, நாமக்கல் நகராட்சியில் 2.15 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இணைக்கப்படும் பகுதிகளையும் சேர்த்தால், நாமக்கல் மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தொகை 3.50 லட்சமாகும். நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சியின் ஆண்டு வருமானம் ₹45 கோடியாகும். இணைக்கப்படும் பகுதியையும் சேர்க்கும் போது, ஆண்டு வருமானம் ₹47 கோடிக்கு மேல் இருக்கும். நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வதால், இணைக்கப்பட்ட பகுதியில் வீட்டுமனைகள் அரசின் விதிமுறைப்படி எளிதாக நடைமுறைபடுத்தப்படும். அந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதர வசதிக்கு அரசின் மானியம் அதிகம் கிடைக்கும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன், நாமக்கல் நகராட்சியில் 100 கிலோ மீட்டர் அளவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிக்கு, பாதாள சாக்கடை திட்டம் ₹313 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் நகரம், மாநகராட்சிக்கு உரிய அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது.

நாமக்கல் நகரில் சாலை பணிகள், மக்களுக்கான குடியிருப்பு வசதிகள் இவை அனைத்தும், நகராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப, சென்னை, கோவை மாநாகராட்சிக்கு இணையான வசதிகள் இங்கு கிடைக்கும். நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் 12 ஊராட்சிகளும், தற்போது அப்படியே இயங்கும். அங்குள்ள ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிகாலம் இருக்கும் வரை, அவை ஊராட்சி மன்றமாகவே தொடர்ந்து செயல்படும் என, அமைச்சர் கே.என் நேரு, சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். முழுமையாக அரசாணை வந்த பின், விதிமுறைகளின் படி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக இயங்கும். அதன்படி, நகராட்சி தலைவர் மேயராகவும், துணைத்தலைவர் துணை மேயராகவும், பதவிக்கான அந்தஸ்து சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைமுறைக்கு வரும்.

நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். அரசாணை பெற, உரிய பரிந்துரைகளை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுப்பிய மாவட்ட கலெக்டர், நகராட்சி தலைவர், ஆணையாளருக்கும் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.அப்போது, மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், அட்மா குழுத்தலைவர் அசோக்குமார், நகராட்சி துணை கொரோடா ஈஸ்வரன் ஆகியோர்
உடனிருந்தனர்.

கலெக்டருக்கு நன்றி

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவை, நேற்று இரவு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, தலைமையில் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சண்முகம், தெற்கு நகர திமுக செயலாளர் ராணா.ஆனந்த், மேற்கு நகர செயலாளர் சிவக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

The post புதியதாக 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Namakkal Municipal Corporation ,Rajeskumar ,CM ,Namakkal ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Namakkal Municipal ,Council ,Kalanithi ,Vice Chairman ,Bhupathi ,Southern City ,DMK ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...