×

கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு அரசு பேருந்து நடத்துனர் குத்திக்கொலை: இருவர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூரில் மதுக்கடையில் பேருந்து நடத்துனர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பேரை போலீசார் கைது செய்தனர். மது குடிக்க பணம் கேட்டு, தாயைப் பற்றி தவறாக பேசியதால் குத்தி கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை மாதவரம் அசிசி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பிஜூ (31) அரசு பேருந்து நடத்துனர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பிஜூ மாதவரத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பிஜூ கொடுங்கையூர் மாதவரம் மில்க் காலனி ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மது போதையில் நின்றிருந்தார். அப்போது அந்த டாஸ்மாக் கடையின் எதிரே உள்ள காலி மைதானத்தில் 2 பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் பிஜூ மது குடிக்க ₹50 பணம் வேண்டும் எனக் கூறியுள்ளார். அவர்கள் ₹50 பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

அதனை வாங்கிக் கொண்ட பிஜு டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துவிட்டு, மீண்டும் அந்த நபர்களிடம் சென்று பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் இல்லை என கூறியுள்ளனர். அதற்கு பிஜு அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது. பிஜூவின் ஆபாச பேச்சுக்களால் கோபம் அடைந்த 2 பேரில் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கத்தியை எடுத்து பிஜுவை வெட்ட முயற்சி செய்தார். உடனடியாக பிஜு எதிரே உள்ள டாஸ்மாக் கடை உள்ளே ஓடினார். அவரை துரத்திச் சென்ற நபர் கத்தியால் ஓங்கி அவரது மார்பின் கீழே குத்திவிட்டு, இருவரும் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று விட்டனர்.

இதில் அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேறி பிஜு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் பிஜூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், எம்.கே.பி நகர் உதவி கமிஷனர் வரதராஜன் உள்ளிட்டோர் கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

அதன்படி சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கி இருந்த மாதவரம் பால்பண்ணை மூல சத்திரம் மெயின் ரோடு சுபம் அவன்யூ முதல் தெருவை சேர்ந்த ரெனில் விக்ரம் (23), மற்றும் செங்குன்றம் செட்டிமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (24) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் ரெனில் விக்ரம் ஆடு வெட்டும் வேலை செய்து வருகிறார். அரவிந்த் மேளம் அடிக்கும் வேலை செய்து வருகிறார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் நேற்று காலி மைதானத்தில் அமர்ந்து மது குடிக்கும் போது பிஜு வந்து பணம் கேட்டதும் அவரை பார்ப்பதற்கு பாவமாக இருந்ததால், ₹50 கொடுத்துள்ளனர். அதில் மது குடித்துவிட்டு மீண்டும் பிஜு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு ரெனில் விக்ரம் தாயை பற்றி திட்டியதால் ஆத்திரமடைந்த ரெனில் விக்ரம், தான் ஆடு உரிக்கும் கத்தியை எடுத்து கோபத்தில் பிஜூவை அவர் குத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ரெனில் விக்ரம் அரவிந்த் ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு அரசு பேருந்து நடத்துனர் குத்திக்கொலை: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tyrant ,shop ,Perampur ,Tyranpur ,Chennai Madhavaram ,Tasmak ,Dinakaran ,
× RELATED சென்னையில் நான்காவது சம்பவம்;...