×

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு ஏன்? பரபரப்பு தகவல்கள்

திண்டிவனம், மார்ச் 16: பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைத்தது ஏன்? பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. பிரதான கட்சியாக உள்ள பாமக, தேமுதிகவிடம் அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாசை, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 2 முறை சந்தித்து பேசினார். அவர்கள் கேட்ட 7 தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டுதர சம்மதம் தெரிவித்து இதனை ராமதாசும் ஏற்று கொண்டதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது.

ஆனால் அன்புமணியோ பாஜகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் சென்னை திநகரில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் அன்புமணியை ஒன்றிய அமைச்சர்கள் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இதில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முடிவானது. இதற்கு ஒப்புக்கொண்ட அன்புமணி பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என ராமதாசை சமாதானம் செய்துள்ளார். ஆனால் ராமதாஸ் கட்சியின் எதிர்கால நலனை கருதியும், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்பதாலும் மகனிடம் பிடிகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணி இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றபின் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என ராமதாஸ் கூறியும் மகனின் உறுதியான முடிவால் கட்சியின் முன்னணி நிர்வாகிகளைகூட சந்திக்காமல் தவிர்த்து வந்தார். இதற்கிடையே ராமதாசை மீறி அன்புமணி தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் ரகசியமாக கூட்டத்தை நடத்த கருதி வீட்டிலேயே நடத்த முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகின.

இக்கூட்டத்தில் தமிழக அரசியல் களம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பாமக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. யாருடன் கூட்டணி என்பதில் கட்சி தலைமைக்குள் ஒருமித்த கருத்து எட்டப்படாததே கூட்டம் ரத்தானதற்கு காரணமாக பாமக வட்டாரத்தில் கூறப்பட்டன. ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தைலாபுரத்தில் தொடர்ந்து இருந்தபடி கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஒருமித்த முடிவு எட்டியபின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு ஏன்? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Bamaka district ,Tindivanam ,DMK ,Tamil Nadu ,Bamaka ,Dinakaran ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...