×

தமிழ்நாட்டில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களை மறுசீரமைக்க ரூ.148.54 கோடிக்கு நிர்வாக அனுமதி: முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களை நிரந்தரமாக மறுசீரமைக்க ரூ.148.54 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 544 கூட்டு குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4.53 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஊரக குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் உயிர் நீர் இயக்கத்தில் தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் உள்ள 125.24 லட்சம் வீடுகளில் இதுவரை 101.95 லட்சம் வீடுகளுக்கு (81.41%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், உயிர் நீர் இயக்கத்தின் கீழ் 45 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள், பயன்பாட்டில் உள்ள 56 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் நீடித்த நிலைத் தன்மையுடைய நீராதாரத்தை கொண்டுள்ள கிராமங்களில் ஒற்றைக் கிராம திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ரூ.18,228.38 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2023 டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் 12 கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் 70 கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இவை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் முழு திறனுடன் நீண்டகாலம் செயல்பட இவற்றை நிரந்தரமாக மறுசீரமைப்பு செய்தல் அவசியமாகும். எனவே பொதுமக்களுக்கு நீண்டகால அடிப்படையில் போதுமான குடிநீர் வழங்க ஏதுவாக மிக்ஜாம் புயல், பெருவெள்ளம் மற்றும் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களை நிரந்தரமாக மறுசீரமைக்க ரூ.148.54 கோடி மதிப்பீட்டில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களை மறுசீரமைக்க ரூ.148.54 கோடிக்கு நிர்வாக அனுமதி: முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CM ,CHENNAI ,Chief Minister ,M. K. Stalin ,Municipal Administration and ,Water Supply Department ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல்