×

அங்கித் திவாரியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி: ஐடி, ஈடியில் லஞ்சம் ஊடுருவியுள்ளதை சகித்துக் கொள்ள முடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதி காட்டம்

மதுரை: திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ் பாபுவிடம், ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைதான, மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு திண்டுக்கல் நீதிமன்றம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடியாகின. மீண்டும் ஜாமீன் கோரி அங்கித் திவாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, ‘ உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததால் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்’’ எனக் கூறி அதற்கான நகலை நீதிபதி முன்பு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது போன்ற செயல்கள் அதிகரித்திருப்பது தேசத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. லஞ்சம் வாங்குவதையும் தடுக்க வேண்டிய வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவியுள்ளதை சகித்துக் கொள்ள முடியாது. தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி மனுதாரர் ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post அங்கித் திவாரியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி: ஐடி, ஈடியில் லஞ்சம் ஊடுருவியுள்ளதை சகித்துக் கொள்ள முடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,ED ,ICourt Branch ,Judge ,Kattam ,Madurai ,Madurai Enforcement ,Officer ,Dindigul Government ,Dr. ,Suresh Babu ,Madurai Central Jail ,Dindigul court ,ICourt ,Dinakaran ,
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்