×

வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம் வெள்ளி தேருக்காக உபயதாரர்கள் வழங்கிய பணம் என்ன ஆனது? பொதுமக்கள் சரமாரி கேள்வி

திருக்கழுக்குன்றம்: திருக்குழக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், வெள்ளி தேருக்காக உபயதாரர்கள் வழங்கி பணம் என்ன ஆனது, தேர் எங்கே? என பொதுமக்கள் சரமாக கேள்வி எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் உலகப் பிரசித்திப்பெற்ற சிவஸ்தலமாகும். திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் (11 நாட்கள் நடைபெறும்) சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, ஏப்ரல் 13ம் தேதி விநாயகர் உற்சவத்துடன் ஏப்ரல் 14ம் தேதி வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் கொடியேற்றத்துடன் முதல் நாள் உற்சவம் தொடங்கி, ஏப்ரல் மாதம் 24ம் தேதி வரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, உபயதாரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கோயில் கூட்ட அரங்கில் நடந்தது. இதில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.

அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் வேலாயுதம், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், அதிமுக நகர செயலாளர் தினேஷ் குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, விஜயகுமார், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் செயல் அலுவலர் பிரியா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தின்போது, ‘திருவிழா காலங்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா மாட்டு வண்டிகளில் நடத்தினால் தாமதமாகும்.

எனவே, டிராக்டர் மூலம் வீதியுலா நடத்தலாம் என்று சிவாச்சாரியார்கள் கூறியதற்கு, உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாரம்பரியப்படியும், ஆகமவிதிப்படியும் மாடுகள் பூட்டிய வண்டியில் தான் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற வேண்டும் என தெரிவித்தனர். அதேப்போல், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அம்மன் வெள்ளித்தேர் செய்ய உபயதாரர்கள் பலரிடம் வசூலிக்கப்பட்ட பணம் என்ன ஆனது? ஏன் தேர் செய்யும் பணி நின்றது? அந்த வசூலிக்கப்பட்ட பணம் எவ்வளவு? யாரிடம் உள்ளது என பொதுமக்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சிவாச்சாரியார் ஒருவர் ‘பணம் ஒரு குறிப்பிட்ட பிரபல நகைக்கடையில் தான் உள்ளது, யாரும் அந்தப் பணத்தை வாங்கவில்லை’ என்று கூறினார். அதற்கு, ‘இத்தனை ஆண்டுகள் அதைக்கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? அதற்கு யார் பொறுப்பேற்பது என்று தொடர்ச்சியாக பல்வேறு கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவிழா காலம் மட்டுமல்லாது மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி கிரிவலம் உள்ளிட்ட விழாக்காலங்களில் வெளியூர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

அவர்களுக்கு கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதிய கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு பதலளித்த பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ், ‘கோயில் நிர்வாகம் உரிய அனுமதி வழங்கினால், கிரிவலப்பாதை மட்டுமின்றி தேவையான இடங்களில் நவீன கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும்’ என்றார்.

The post வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம் வெள்ளி தேருக்காக உபயதாரர்கள் வழங்கிய பணம் என்ன ஆனது? பொதுமக்கள் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Vedakriswarar Chitrai festival ,Thirukkukkunram ,Vedakriswarar temple painting festival consultation meeting ,Thirukkalukkunram ,Tripurasundari Udanurai ,Vedakriswarar Chitrai festival consultation ,
× RELATED பண்ருட்டியில் காடுவெட்டி குரு மகனை...