×

பாஜவுடன் கூட்டணி வைக்க கட்சிக்குள் கடும் எதிர்ப்பு: தைலாபுரத்தில் நடக்க இருந்த பாமக மாவட்ட செயலர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

திண்டிவனம்: பாஜவுடன் பாமக கூட்டணி வைப்பது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடக்க இருந்த மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. பாஜவுடன் கூட்டணி வைக்க பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. பிரதான கட்சியாக உள்ள பாமக, தேமுதிகவிடம் அதிமுக தரப்பில் கூட்டணி தொடர்பாக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாசை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் இரண்டு முறை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார். அவர்கள் கேட்ட 7 தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தர சம்மதம் தெரிவித்து இதனை ராமதாசும் ஏற்று கொண்டதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் அன்புமணியோ பாஜகவுடன்தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

சமீபத்தில் சென்னை திநகரில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் ஒன்றிய அமைச்சர்கள் அன்புமணியை ரகசியமாக சந்தித்து பேசினார்கள். அப்போது பாமகவுக்கு 10 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முடிவானது. இதற்கு ஒப்புக்கொண்ட அன்புமணி பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என ராமதாசை சமாதானம் செய்துள்ளார். ஆனால் ராமதாஸ் இதற்கு பிடி கொடுக்கவில்லை. இதனால் தந்தை, மகன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை நிலவுகிறது. இதனால் பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என ஆரம்பத்தில் இருந்து அன்புமணியிடம் ராமதாஸ் கூறி வந்தார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கணிசமான வாக்குகள் பெறவோ, டெபாசிட் பெறவோ வாய்ப்பு உள்ளது. பாஜவுடன் கூட்டணி வைத்தால் வருங்காலத்தில் கட்சியை நடத்த முடியாது.

கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துவிடும் என ராமதாஸ் கூறினாராம். ஆனால் அன்புமணியோ, மீண்டும் பாஜதான் மத்தியில் ஆட்சிக்கு வரும் என்ற நப்பாசையில் ஆரம்பத்தில் இருந்தே பாஜவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற மனநிலையில் இருந்து வருகிறாராம். அப்படி வந்தால் எப்படியாவது மந்திரி பதவி வாங்கி விடலாம் என அவர் கனவு காண்கிறாராம். மகனை எதிர்த்து ராமதாசால் ஒன்றும் செய்ய முடியாத சூழல் உள்ளது. மகனின் முடிவால் அப்செட்டில் இருந்த ராமதாஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்பட யாரையும் சந்திக்ககாமல் இருந்துவந்தார். இதற்கிடையே ராமதாசை மீறி அன்புமணி தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக பாமக மாவட்ட செயலாளர்கள் மத்தியில் தகவல் பரவியது. பாஜவுடன் கூட்டணி சேரும் அன்புமணியின் முடிவுக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கடும் எதிர்ப்பு ெதரிவித்துள்ளனர்.

உடனே அவர்களை அழைத்து கூட்டம் நடத்தி சமரசம் செய்ய அன்புமணி முடிவு செய்தார். இந்த நிலையில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் தைலாபுரத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்க உள்ளதாக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதில் பாஜவுடன் கூட்டணி வைப்பதற்கான அவசியம் குறித்து அன்புமணி, மாவட்ட செயலாளர்கள் மத்தியில் விளக்குவார் என கூறப்பட்டது. காலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்து மாலையில் யாருடன் கூட்டணி என்பதை பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. வழக்கமாக ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கமான மாங்கனி அரங்கில்தான் நடக்கும். இந்த இடத்திற்கு கட்சிக்காரர்கள் எந்தவித கெடுபிடியும் இன்றி சுலபமாக வந்து செல்ல முடியும்.

ஆனால் ரகசியமாக நடக்கும் இந்த கூட்டத்திற்கு கட்சிக்காரரர்கள் யாரும் வந்துவிடக்கூடாது என்பதால் தோட்டத்தில் உள்ள ராமதாசின் வீட்டிலே கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வீடு அமைந்துள்ள பகுதிக்கு அவ்வளவு சுலபத்தில் யாரும் செல்ல முடியாது என்பதால் தான் இந்த ரகசிய கூட்டம் அவரது வீட்டிலே நடத்த முடிவு செய்திருந்தனர். இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில் பாமக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜவுடன் கூட்டணி சம்பந்தமாக ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலும், அன்புமணிக்கு பல மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும்தான் இந்த கூட்டம் ஒத்திவைப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தைலாபுரத்தில் தான் உள்ளனர். கூட்டணி சம்பந்தமாக இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை பேசி ஒரு முடிவுக்கு வந்த பின் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தி பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

The post பாஜவுடன் கூட்டணி வைக்க கட்சிக்குள் கடும் எதிர்ப்பு: தைலாபுரத்தில் நடக்க இருந்த பாமக மாவட்ட செயலர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,BAMAK ,Thilapuram ,Tindivanam ,Thilapuram Estate ,BMC ,BJP.… ,Thailapuram ,Dinakaran ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி