×

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேணும்! எம்பி கபில் சிபல் கோரிக்கை

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினை நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்தது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், ‘அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தற்போது உறக்கத்தில் இருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் இவ்வாறு செயல்பட்டிருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். தற்போது அவர்கள் கொஞ்சம் கூடுதலாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியாவின் கருப்புப் பணத்தை எடுத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் தற்போதைய நிகழ்வைப் பார்க்கும் போது அந்த தொகைகள் அவர்களின் வங்கிக்கணக்கில் மாற்றப்பட்டது போல தெரிகிறது.

என்னைப் பொறுத்த வரையில் இந்த விவகாரத்தை ஏற்கெனவே இருக்கிற விசாரணை அமைப்புகளைக் கொண்டு விசாரணை செய்யக்கூடாது. அவர்கள் என்ன செய்தார்கள், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தீர்மானிக்க வேண்டியது தற்போது நீதிமன்றத்தின் பொறுப்பு. தேர்தல் பத்திரம் விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். பிஎம் கேர்ஸ்-க்கு எவ்வளவு நிதி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தக் கட்சி எவ்வளவு பணம் கொடுத்தது என்பது விசாரணைக்கு உரிய விஷயம்’ என்றார்.

The post தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேணும்! எம்பி கபில் சிபல் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Securities ,Special Intelligence Committee ,MB Kapil Cibal ,NEW DELHI ,KABIL SIBAL ,Supreme Court ,Election Commission ,SBI Bank ,Kapil Sibal ,Dinakaran ,
× RELATED அதானி முறைகேடு விவகாரம்; இன்னொரு...