×

இ-சேவை மையங்களில் எல்எல்ஆர் பெற விண்ணப்பம்

 

சிவகங்கை, மார்ச் 15: வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்(எல்எல்ஆர்) பெறுவதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்களையும் பொதுமக்கள் அணுகி வருகின்றனர்.

இதனால், தேவையற்ற செலவு ஏற்படுகிறது. மேலும், இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. இந்த சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கும், அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையிலும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கு, தமிழக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் முறை, நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சேவையை பெறுவதற்கு பொதுமக்கள் சேவைக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். மேலும், மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் பெற இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இ-சேவை மையங்களில் எல்எல்ஆர் பெற விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Collector ,Asha Ajith ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்