×

கீழ்கௌஹட்டி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

ஊட்டி, மார்ச் 15: கீழ்கௌஹட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது. தற்போது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இதனை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி துறைக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி உட்பட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அந்தந்த பள்ளி ஆசிரியர்களும் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள கீழ்கௌஹட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இப்பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியை தேவரம்மா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி அனிதா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த பேரணி, கீழ்கௌஹட்டி பகுதியில் துவங்கி முத்தோரை வரை சென்றது. அப்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இப்பேரணியில், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள், சமூக ஆர்வலர் சுந்தரம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கீழ்கௌஹட்டி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Lower Gauhati Govt ,Ooty ,Lower Gauhati Panchayat Union Middle School ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...