×

18,626 பக்க அறிக்கை குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் தாக்கல் 2029 முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல்: மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை; 100 நாட்களுக்குள் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த யோசனை

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினர் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் 18 ஆயிரம் 626 பக்க அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் 2029ல் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்திலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 100 நாட்களுக்குள்ளும் தேர்தல் நடத்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய பா.ஜ அரசு விரும்பியது. இதற்காக கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவில் ​​உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்கே சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். இந்த குழுவினர் சட்ட நிபுணர்கள், அரசியல் கட்சிகள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். இந்த கருத்துகள் மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த தேவையான பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை ராம்நாத்கோவிந்த் தலைமையிலான குழுவினர் தயார் செய்தனர்.

18,626 பக்கம் கொண்ட அந்த அறிக்கையை நேற்று ஜனாதிபதி முர்முவிடம், ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் குழுவினர் நேரில் சென்று வழங்கினார்கள். அந்த மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த 100 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை ஊக்குவிக்கப்படும். ஜனநாயக அடிப்படை கொள்கைகள் மேலும் வலுப்படும். இந்தியாவின் கனவுகள் நனவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்நாத் கோவிந்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு:
* மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு அவை அமைந்தால் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டால் புதிய தேர்தல் நடத்தலாம். இந்த புதிய தேர்தல் என்பது அவையின் மீதம் உள்ள பதவிக்காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
* மாநில சட்டப் பேரவைகளுக்கு புதிய தேர்தல்கள் நடத்தப்படும் போது, மக்களவையின் முழு பதவிக்காலம் முடியும் வரை அந்த அவைகள் தொடரும். இந்த வசதிக்காக, அதாவது மக்களவை தேர்தல் நடத்தும் வரை சட்டப்பேரவை பதவிக்காலத்தை நீட்டவும், குறைக்கவும் வசதியாக சட்டப்பிரிவு 83 (நாடாளுமன்றத்தின் அவைகளின் காலம்) மற்றும் பிரிவு 172 (மாநில சட்டமன்றங்களின் காலம்) திருத்தப்பட வேண்டும்.
* மக்களவை, மாநில சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல்களுக்கு பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலைக் கையாளும் பிரிவு 325 இந்த நோக்கத்திற்காக பொருத்தமானதாக மாற்றலாம்.
* இப்போது, ​​ஒவ்வொரு ஆண்டும் பல தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இது அரசுகள், வணிகங்கள், தொழிலாளர்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பொது சமூகத்தின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கையை மீண்டும் மேற்கொண்டு, அதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். இதற்காக அரசியலமைப்பில் குறைந்தபட்ச திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
* ஒரே நேரத்தில் தேர்தல்கள் தொடர்பான உயர்மட்டக் குழு, இந்த முன்மொழிவை செயல்படுத்துவதற்கு அரசியலமைப்பு மற்றும் பிற சட்டங்களில் 18 தனித்துவமான திருத்தங்கள் தேவை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்காக பிரிவு 325ல் மாநில தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலை தயாரிக்கலாம். மேலும் பிரிவு 324ஏ பிரிவை திருத்தி நகராட்சிகள், பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை.
* மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் தொடர்ந்து நடத்த வசதியாக பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் மக்களவையின் முதல் கூட்டத்தின் தேதியை ‘நியமிக்கப்பட்ட தேதி’ என்று ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். அதன் பிறகு தேர்தல் நடத்தப்படும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த மக்களவை தேர்தல் வரை மட்டுமே இருக்கும். இந்த ஒரு இடைக்கால நடவடிக்கைக்குப் பிறகு, அனைத்து மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறும்.
* மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான மின்னணு இயந்திரங்கள் மற்றும் விவிபேட், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படைகளை ஈடுபடுத்துவது போன்றவற்றுக்கு தேர்தல் ஆணையம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இதேபோல், உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையங்களுடன் கலந்தாலோசித்து திட்டமிட வேண்டும். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை எப்போது அமல்படுத்த வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் குழு எதுவும் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. ஆனால் வரும் 2029 மக்களவை தேர்தலில் இருந்து ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சட்ட கமிஷன் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* திமுக எதிர்ப்பு; அதிமுக ஆதரவு
ஒரே நாடு,ஒரே தேர்தலுக்கு தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பு தெரிவித்தது. அதே சமயம் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. பா.ஜ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

* 32 கட்சிகள் ஆதரவு; 15 கட்சிகள் எதிர்ப்பு
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான யோசனைக்கு 47 அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்திருந்தன. அவற்றில் 32 கட்சிகள் இந்த யோசனைக்கு ஆதரவாகவும், 15 கட்சிகள் எதிராகவும் கருத்து தெரிவித்ததாக ராம்நாத் கோவிந்த் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாஜ, தேசிய மக்கள் கட்சி ஆகிய தேசிய கட்சிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் 62 அரசியல் கட்சிகளிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. 18 கட்சிகளிடம் நேரடி ஆலோசனையும் நடத்தப்பட்டது.

* மாநிலங்களின் அதிகாரம் 7 நாடுகளின் முறைகள் ஆய்வு
ஒரே நாடு, ஒரே தேர்தல்’ அடிப்படையில் செயல்படும் தென்னாப்பிரிக்கா, ஸ்வீடன், பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேர்தல் நடைமுறைகளை ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தும் போது ஏற்படும் பிரச்னைகளை மற்ற நாடுகள் கையாளும் விதம் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்களில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த சிறந்த சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றுவதே இதன் நோக்கமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஆதரித்த தலைமை நீதிபதிகள்; எதிர்த்த சென்னை நீதிபதி
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, நீதிபதி யு.யு. லலித் ஆகியோர் முழு ஆதரவு அளித்தனர். முக்கிய உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகளில் 9 பேர் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆதரவு அளித்தனர். அவர்களில் 3 பேர் கவலைகள் மற்றும் ஆட்சேபனைகளை எழுப்பினர். முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கருத்தையே எதிர்த்தார். இதுதொடர்பாக அவர் குறிப்பிடுகையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மாநில அளவிலான அரசியல் மாற்றங்களையும், ஜனநாயக கருத்துக்களையும் தெரிவிப்பதை கட்டுப்படுத்தக் கூடும்’ என்று கவலை தெரிவித்தார். முன்னாள் கொல்கத்தா உயர் தலைமை நீதிபதி கிரிஷ் சந்திர குப்தா, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்தார். இந்த யோசனை ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு உகந்தது அல்ல என்று கூறினார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியும் இதை கடுமையாக எதிர்த்தார். அவர் கூறுகையில்,’இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். மேலும் மாநில பிரச்னைகளுக்கு பாதகமாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

* தமிழ்நாடு மாஜி தேர்தல் ஆணையர் எதிர்ப்பு
ராம்நாத்கோவிந்த் குழுவால் ஆலோசிக்கப்பட்ட 4 முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்களும் ஒரே நேரத்தில் தேர்தலை ஆதரித்தனர். அதே சமயம் தற்போதைய மற்றும் முன்னாள் மாநில தேர்தல் ஆணையர்களில் 7 பேர் இந்த யோசனைக்கு ஆதரவு அளித்தனர். அதே நேரத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையராக இருந்த பழனிக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

* கருத்து தெரிவிக்காத கட்சிகள்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு பாரத் ராஷ்ட்ர சமிதி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, கேரளா காங்கிரஸ் (எம்), ராஷ்ட்ரிய ஜனதா தளம், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி, தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

* காங்கிரஸ், பா.ஜ கருத்து
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘பிரதமரின் நோக்கம் மிகத் தெளிவாக உள்ளது. அவர் அறுதிப் பெரும்பான்மை அதுவும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை, 400 இடங்கள் கேட்டு வலம் வருகிறார். ஆனால் பூனை பையில் இருந்து வெளியே வந்துவிட்டது. அவர்கள் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை முற்றிலுமாக சிதைக்க விரும்புகிறார்கள். அதற்காகத்தான் ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ என்ற அஸ்திரத்தை எடுத்து வந்துள்ளனர். பாஜ செய்தித் தொடர்பாளர் நலின் கோஹ்லி கூறுகையில், ‘இது அரசியல் பிரச்னை அல்ல, பணம் மற்றும் பிற வளங்களை சேமிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்றார்.

* வரலாற்று சிறப்பு மிக்க நாள் அமித்ஷா பெருமிதம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில்,’ நாட்டின் ஜனநாயக அமைப்புக்கு இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். ராம்நாத்கோவிந்த் தலைமையில், ஒரு நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மோடி அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு ஜனாதிபதியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

* தாக்கல் செய்தது 18,626 பக்கம்: வெளியானது 321 மட்டுமே
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் குழு 18,626 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. இருப்பினும் 321 பக்க அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலங்களில் எப்போது தேர்தல்?
2024 ஏப்ரல், மே அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஆந்திரா, ஒடிசா
2024 நவம்பர் அரியானா, மகாராஷ்டிரா
2025 ஜார்கண்ட், பீகார், டெல்லி
2026 மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி
2027 மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், குஜராத்
2028 இமாச்சலப்பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகா, தெலங்கானா, மிசோரம், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால், 2024 நவம்பர் முதல் தேர்தல் நடக்கும் மாநில சட்டப்பேரவைகளின் ஆயுட்காலம் 2029 மே மாதம் முடிவடைந்துவிடும்.

* ஒட்டுமொத்தமாக பறிப்பு
தற்போது மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தும் பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. அதே நேரத்தில் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களை மாநில தேர்தல் கமிஷன்கள் நடத்துகின்றன. இதில் பல்வேறு திருத்தங்களை ராம்நாத்கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த திருத்தங்களை மேற்கொள்ள மாநில சட்டப்பேரவைகளில் முன்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால் ராம்நாத்கோவிந்த் குழு பரிந்துரை அடிப்படையில் மாநிலங்களின் சட்ட அதிகாரம் ஒட்டுமொத்தமாக பறிக்கப்பட்டு, இந்த திருத்தங்களுக்கு அனைத்து மாநிலங்களின் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது ராம்நாத் குழு 18 அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது. அவற்றில் பெரும்பாலான திருத்தங்களை மேற்கொள்ள மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புதல் பெறத்தேவையில்லை. இருப்பினும் சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசியலமைப்பின் 368 (2) வது பிரிவின் கீழ், இரண்டாவது அரசியலமைப்பு திருத்த மசோதாவில் திருத்தங்களைச் செய்ய பாதிக்கும் குறைவான மாநிலங்கள் ஒப்புதல் அளித்தால் போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பா.ஜ ஆளும் மாநிலங்கள் அல்லது ஆதரவு கட்சிகள் ஆளும் மாநிலங்களை வைத்து அனைத்து திருத்தங்களையும் நிறைவேற்ற ஒன்றிய அரசு துடிப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

The post 18,626 பக்க அறிக்கை குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் தாக்கல் 2029 முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல்: மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை; 100 நாட்களுக்குள் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த யோசனை appeared first on Dinakaran.

Tags : Ram Nath Kovind ,President ,Lok Sabha, ,Legislative Assembly ,New Delhi ,One Nation ,One Election Committee ,Drabupati Murmu ,Lok Sabha ,Legislative Assemblies ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...