×

ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றிருந்தால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க புலனாய்வுக்குழுவை அரசு நியமிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. மோசடி செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்ற நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

மதுரையை தலைமையகமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 30%க்கும் மேல் வட்டி கொடுப்பதாகவும், முதலீடு செய்த பணத்திற்கு இடங்கள் தெரிவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகள் அமைத்து ஆயிரக்கணக்கான மக்களிடம் சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.

இதன் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து முக்கிய இயக்குனராக உள்ள கமலக்கண்ணன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே உள்ள நபர்கள் வழக்கின் முக்கிய சாராம்சங்களை கெடுப்பதாகவும், சாட்சிகளை கலைப்பதாகவும், இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தம்பிசெல்வன் ஆஜராகி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையம் நியமித்துள்ளதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதுபோன்ற நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி செல்லலாம் என்று நினைக்கின்றனர். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது.

இவர்களை கட்டுப்படுத்துவதற்கான உரிய கட்டளைகள் நியமிக்கக்கூடிய காலம் வந்துவிட்டது, எனவே இனிமேல் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றிருந்தால் அந்த வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செய்யாமல், அரசு உத்தரவிற்கிணங்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் குற்றவாளிகள் வெளிநாடு தப்பிச்செல்ல விடாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்து விவரங்களையும் வரவிருக்கும் விசாரணையில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றிருந்தால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்: ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Special Investigation Committee ,iCourt ,Madurai ,Icourt branch ,Special Investigation Team ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...