×

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: 42-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை அணி அசத்தல்!

மும்பை: ரஞ்சி கோப்பை வரலாற்றில் 42-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை அணி அசத்தியுள்ளது. 89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை – விதர்பா அணிகள் மோதின. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா, மும்பை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 105 ரன்களில் சுருண்டது. பின்னர் 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை 418 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 528 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய விதர்பா 4-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் அடித்திருந்தது. அக்ஷய் வாட்கர் 56 ரன்களுடனும், ஹர்ஷ் துபே 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை தரப்பில் முஷீர் கான் மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட்டுகளும், ஷாம்ஸ் முலானி 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். இதனையடுத்து 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த விதர்பா அணியில் அக்ஷய் வாட்கர் சதமும், ஹர்ஷ் துபே அரைசதமும் அடித்து அசத்தினர். ஆனால் இருவரும் ஆட்டமிழந்த பின் மற்ற வீரர்கள் யாரும் தாக்கு பிடிக்கவில்லை. முடிவில் விதர்பா 2-வது இன்னிங்சில் 368 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, 42-வது முறையாக இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது. விதர்பா தரப்பில் அதிகபட்சமாக அக்ஷய் வாட்கர் 102 ரன்களும், ஹர்ஷ் துபே 65 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளும், முஷீர் கான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

 

The post ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: 42-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை அணி அசத்தல்! appeared first on Dinakaran.

Tags : Ranchi Cup ,Mumbai ,89th ,Vangade Stadium ,Vidarbha ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!