×

முடிவு எடுக்க முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி இறுதி

சென்னை: அதிமுகவுடன் கூட்டணியை தேமுதிக உறுதி செய்கிறது. அதேநேரத்தில் மிரட்டலுக்குப் பயந்து பாமக, பாஜவுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு எடுத்துள்ளது. இதனால் அக்கட்சிக்கு ஒன்றிய அமைச்சர், ஒரு மாநிலங்களவை, 10 மக்களவை சீட் வழங்குவதாக பாஜ வாக்குறுதி அளித்துள்ளது. அதை நம்பி அன்புமணி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒன்று, இரண்டு நாளில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியை பொறுத்தவரை எந்தவித சிக்கலும் இல்லாமல் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து விட்டது. ஆனால் அதிமுக, பாஜ ஆகிய கட்சிகள் தங்கள் அணியில் எந்தெந்த கட்சிகளை இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் இன்னும் ஒரு இறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக உள்ள அதிமுகவின் நிலை இந்த தேர்தலில் பரிதாபமாக உள்ளது. பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி பிறகு அதிமுக கட்சியை சிறிய கட்சிகள் கூட மதித்து கூட்டணிக்கு செல்லாமல் தவிர்த்து வருகிறது. ஆனாலும் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு அதிமுக ஆசைவார்த்தை கூறி கூட்டணிக்கு இழுக்க முயற்சி செய்தது. அதன் ஒரு கட்டமாக, பாமகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்தது. தேமுதிகவுடன் 2 கட்டங்களாக நேரடியாகவும் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் கூட்டணி முடிவாகவில்லை.
தங்களது கோரிக்கையை அதிமுக ஏற்க மறுத்ததால், ஒரு கட்டத்தில் தேமுதிக மற்றும் பாமக கட்சிகள் பாஜவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனாலும், இரண்டு தரப்பிலும் இது உறுதி செய்யப்படவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைக்கு எந்த கட்சிகளும் வராததால், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பாஜவுடன் ரகசிய பேச்சு நடத்துவது உறுதியான தகவல்தான் என்று கூறப்பட்டது. இதை ஒரு கட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் உறுதி செய்தார்.

இந்நிலையில் தேமுதிக வைத்த கோரிக்கையை பாஜ ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்கு தற்போது அதிமுக தலைமையும் ஒத்துக்கொண்டு, தேமுதிகவை 3வது கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி நேற்று அழைப்பு விடுத்துள்ளது. ஆனாலும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அதிமுக தலைமையிடம் சில கோரிக்கைகள் முன் வைத்துள்ளதாக தெரிகிறது. அதாவது, கண்டிப்பாக ஒரு மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும். மேலும், 5 நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக கள்ளக்குறிச்சி, நெல்லை உள்ளிட்ட சில இடங்களை குறிப்பிட்டு கேட்டுள்ளார். தேமுதிக தற்போது வைத்துள்ள கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க அதிமுக தலைமையும் முன்வந்துள்ளது. இதனால்தான் இன்று தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அதன்படி, தேமுதிக நிர்வாகிகள் இன்று அல்லது நாளை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று 3வது கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர்.

அதேநேரத்தில் பாமகவுக்கு 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முன் வந்தது. அதை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றுக் கொண்டார். ஆனால் அன்புமணியை அழைத்த பாஜ மேலிடம், நீங்கள் பாஜவுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும். உங்களுக்கு ஒன்றிய அமைச்சர், ஒரு மாநிலங்களவை, 10 மக்களவை சீட் தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டத்தில்தான் பாஜவுக்கு நிர்வாகிகள் உள்ளனர். ஆனால் வட மாவட்டங்களில் பாஜவுக்கு எந்த ஆதரவும் இல்லை. இதனால் பாமகவை கூட்டணி சேர்த்தால், நோட்டாவுக்கு கீழ் வாங்காமல் தப்பித்துக் கொள்ளலாம் என பாஜ திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதோடு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த வழக்கை இன்னும் நிலுவையில் வைத்துள்ளது. இதனால், வழக்கை காரணம் காட்டியும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், நேற்று தைலாபுரம் சென்ற அன்புமணி, ராமதாசை சந்தித்துப் பேசினார். அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களும், ராமதாசும் விரும்பினர். ஆனால் ராமதாசிடம் பேசி அவரை அன்புமணி சரிக்கட்டினார். இதனால் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாமக நிறுத்திக் கொண்டது. பாஜ மேலிடத்துடன் பேசத் தொடங்கியுள்ளது. இதனால் ஓரிரு நாளில் தமிழக பாஜ நிர்வாகிகள் முறைப்படி பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்துப் பேசுவார்கள். அதன்பின்னர் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறி வருவது அக்கட்சிகளின் தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post முடிவு எடுக்க முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி இறுதி appeared first on Dinakaran.

Tags : Temuthika ,Chennai ,Demudika ,Atamuga ,Bamaka ,BJP ,EU ,minister ,Demutika ,Dinakaran ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்