×

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா மோட்டார்ஸ் குழுமம் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

* முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
* 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
* ராணிப்பேட்டையில் அமைகிறது புதிய தொழிற்சாலை

சென்னை: சென்னையில் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ் மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டாடா மோட்டார்ஸ் குழுமம் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், வாகன உற்பத்தித் திட்டத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில், ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் வாகனத் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக, முதல்வர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, சென்னையில் நிருபர்களிடம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியே காரணம். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீட்டாளர்கள் முதலில் முதல்வரின் கதவை தான் தட்டுகின்றனர். அதேபோல், தமிழகத்தில் இருக்கும் சூழல், கட்டமைப்பு வசதிகள், தொழிற்சாலை அமைக்க ஏதுவான இடங்கள், மகளிருக்கான பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தான் பல புதிய தொழில்துறை நிறுவனங்கள் தொழிற்சாலைகளை தொடங்குகின்றனர். அதன் தொடர்ச்சியாக டாடா நிறுவனம் தமிழகத்தில் ரூ.9,000 கோடியில் முதலீடு செய்துள்ளது என்றார்.

The post ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா மோட்டார்ஸ் குழுமம் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Tata Motors Group ,Principal ,M.U. K. Sign ,Stalin ,Ranipetta Chennai ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி