×

ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் திமுக எதிர்கொள்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம்

சென்னை: சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, ஏணி, ஒட்டடை குச்சி, துடைப்பம், தண்ணீர் பீச்சும் இயந்திரம் மற்றும் குழாய்கள், சலவைப் பொருட்கள், தூய்மைப் பொருட்கள் வழங்கி உழவாரப் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

அடியார்களாலும், தன்னார்வலர்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற உழவாரப் பணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட 5 கோயில்களுக்கு முதற்கட்டமாக உழவாரப்பணி மேற்கொள்வதற்குண்டான 12 வகையான உபகரணங்களை கட்டணமில்லாமல் வழங்குகின்றோம். உழவாரப்பணி முடிந்தவுடன் திரும்பவும் கோயிலிலேயே ஒப்படைத்து விட வேண்டும்.

உழவாரப் பணியில் ஈடுபடுகின்ற அன்பர்களுக்கு தேனீர் மற்றும் காலை சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும் என்றும், உழவாரப்பணி மேற்கொள்பவர்களுக்கு துறையின் சார்பில் அந்தந்த இணை ஆணையர்கள் மூலம் நற்சான்றிதழ் வழங்குவதற்கும் முதலல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இறை நம்பிக்கையோடு செய்கின்ற, எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மை உள்ளத்தோடு ஆலயங்களை தூய்மைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு இருக்கின்ற உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நிச்சயம் ஆண்டவனால் வழங்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்ட முடிவுகளின்படி பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ளவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 நாட்கள் நடைபெறுகின்ற இம்மாநாட்டில் முருகப்பெருமானின் பெருமைகளை விளக்கும் கண்காட்சி அமைத்திடவும், சிறப்பு மலர் வெளியிடவும், ஆன்மிக சொற்பொழிவுகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இம்மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக நிச்சயம் அமையும். அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போலகோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

திமுகவின் நிலைப்பாடு எப்போதும் எதையும் எதிர்கொள்வது தான். உள்ளதை சொல்வது, சொல்வதை செய்வது என்பது திமுகவின் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருப்போம். தமிழக அரசியல் வரலாற்றில் பல்வேறு வகையில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்தாலும், அமலாக்கத்துறை, வருவான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை ஏவுகணைகளாக பயன்படுத்தினாலும் எதற்கும் அஞ்சாமல் எதிர்கொள்ளுகின்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். ஆகவே எதற்கும் இந்த ஆட்சியும் இந்த இயக்கமும் பயப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், இணை ஆணையர்கள் லட்சுமணன், ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் திமுக எதிர்கொள்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,DMK ,Minister ,PK Shekharbabu Kattam ,CHENNAI ,PK Shekharbabu ,Thiruvanmiyur ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...