×

பேரணி மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முகாம் : கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர், மார்ச் 14: திருவள்ளூர், லட்சுமிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை முதலாம் வகுப்பு சேர்க்கையினை இனிப்புகள், பள்ளி சீருடைகள் பாடப் புத்தகங்கள் வழங்கி துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் காரணமாக மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து அரசு பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2024 – 25ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காக விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி பயில 7.5 சதவிகிதம் முன்னுரிமை அளிக்கப்படுவது, பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், தொடக்க நிலை மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் விதமாக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், தற்காப்பு கலை பயிற்சி, கல்வி சுற்றுலா, இலக்கிய மன்றம், வானவில் மன்றம், கலைத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தொடர்ந்து முதலாம் வகுப்பு சேர்க்கையை மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கி மலர் மாலை அணிவித்து புதிய நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி சாதனங்களை வழங்கி நடப்புக் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 1,876 மாணவ, மானவிகளுக்கு முதலாம் வகுப்பு சேர்க்கை நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக குழந்தைத் தொழிலாளர்களை பள்ளிகளுக்கு அனுப்புவதன் அவசியம் குறித்த நடைப்பெற்ற நாடகத்தினை பார்வையிட்டார். இதில் முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், நகராட்சி ஆணையர் சுபாஷினி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா, வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புழல்: செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள புழல் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா கல்விநாதன், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புழல் வட்டார கல்வி அலுவலர் பால் சுதாகர் மாணவர் சேர்க்கை பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய மாணவர் சேர்க்கை பேரணி அழிஞ்சிவாக்கம் ஊராட்சி வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது.

பேரணியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி மதுரை முத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் தீபா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், செங்குன்றம் தெற்கு ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் இலக்கியன் தலைமையில் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு அண்ணா பார்க்தெரு, நேதாஜி தெரு, அறிஞர் அண்ணா தெரு, உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்ற மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிந்தது. இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை அணிவித்து வரவேற்பு
ஊத்துக்கோட்டை: பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் வட்டார கல்வி அலுவலர் கல்பனா பங்கேற்றார். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 110 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி, கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்வு செய்து, தமிழ்நாடு அரசு விருது வழங்கியுள்ளது. இந்த, அரசு தொடக்கப்பள்ளியில், குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் வெஸ்லி ராபர்ட் தலைமை தாங்கினார்.

ஊராட்சி தலைவர் அன்பு, துணை தலைவர் மீனா முருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் கல்பனா கலந்துகொண்டு, மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்து, துண்டு பிரசுரங்களை வழங்கினார். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி பஜார் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, அரசு பள்ளி கல்வித்துறைக்கு செய்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர், பள்ளியில் சேர்ந்த மாணவ – மாணவிகளை வட்டார கல்வி அலுவலர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர், மாலை அணிவித்தும், மலர்தூவி வரவேற்றனர். இப்பேரணியில் மாணவ – மாணவிகளின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

The post பேரணி மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முகாம் : கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,District Collector ,T. Prabhushankar ,School Education Department ,Lakshmipuram Municipal Middle School ,Tamilnadu ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில்...