×

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது: மதுவிலக்கு போலீசார் அதிரடி

அம்பத்தூர், மார்ச் 14: ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை மதுவிலக்கு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கத்துறை உதவி ஆணையர் சங்கு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய மூட்டையை சுமந்து கொண்டு வந்த வடமாநில வாலிபரை நிறுத்தி சோதனை நடத்த முயன்றனர்.

உடனே, அவர் மூட்டையை கீழே போட்டுவிட்டு தப்பிச்செல்ல முயன்றார். போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். மூட்டையை சோதனை செய்தபோது துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை அண்ணாநகர் மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் ஒடிசாவைச் சேர்ந்த தாமோதர் பட்டேயல் (28) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தாமோதர் பட்டேயல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: ஒடிசாவில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நண்பரிடம் வேலை கேட்டு வந்தேன். அப்போது, சென்னை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கஞ்சா விற்பனை செய்தால் அதிக வருமானம் கிடைப்பதை அறிந்து கொண்டேன். எனவே, ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து கஞ்சா விற்கும் நபர்களிடம் கொடுத்துவிடுவேன். அவர்கள் யார் என்பது தெரியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சென்னை அண்ணா நகர், வில்லிவாக்கம் ஐ.சி.எப், அரும்பாக்கம், அமைந்தகரை, நொளம்பூர், திருமங்கலம், கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், பெரம்பூர், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை சற்று குறைந்துள்ளது என்ன காரணம் என்றால் அண்ணா நகர் மது விலக்கு போலீசார் மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து வருகின்றனர். அதேபோல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கஞ்சா விற்று வரும் கஞ்சா வியாபாரி மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணா நகர் மது விலக்கு பிரிவில் இரண்டு மாதமாக இன்ஸ்பெக்டர் இல்லாததால் கஞ்சா வியாபாரிகளை பிடிப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. எனவே, அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவுக்கு இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும்’’ என கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது: மதுவிலக்கு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Odisha ,Chennai ,Ambattur ,Prohibition Police ,State ,Anna Nagar ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...