×

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு

சென்னை: காலநிலை மாற்றத்தால் வரும் அச்சுறுத்தல் கால்நடை உற்பத்தி முறையின் நீடித்த தன்மையை பாதித்துவருகிறது என இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை தலைமை இயக்குநர் ராகவேந்திர பட்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநரும், பல்கலை வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் துணை தலைமை இயக்குநர் (கால்நடை அறிவியல்) ராகவேந்திர பட்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துணைவேந்தர் செல்வக்குமார், பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் 644 மாணவர்கள், 522 மாணவிகள் என 1,166 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அவற்றுள் 995 பேர் நேரடியாக பட்டங்களை பெற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். 253 பேருக்கு விருதுகளையும் வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை தலைமை இயக்குநர் ராகவேந்திர பட்டா பேசுகையில், மொத்த உணவு ஆற்றல் தேவையில் 15 சதவீதம் பங்களிப்பையும், உணவுப் புரதத்தில் 25 சதவீதம் பங்களிப்பையும் கால்நடை துறை வழங்குகிறது. காலநிலை மாற்றத்தால் வரும் அச்சுறுத்தல் நமது கால்நடை உற்பத்தி முறையின் நீடித்த தன்மையை பாதித்துவருகிறது.

எனவே அரசும், அரசு சாரா நிறுவனங்களும் இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றார். விழாவில் மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பெயர் அழைப்பிதழில் இருந்தது. தமிழ்நாட்டுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் விழாவை புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் நிலையில், தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Governor ,RN ,Ravi ,Tamil ,Nadu Veterinary University Graduation ,Minister ,Anitha Radhakrishnan ,Chennai ,Raghavendra Bhatta ,Deputy Director General ,Indian Agricultural Research Institute ,Tamil Nadu Veterinary Science University… ,Governor RN ,Tamil Nadu Veterinary University ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து