×

கருண் நாயர் 74, அக்‌ஷய் வாத்கர் 56* விதர்பா 5 விக்கெட்டுக்கு 248: கடைசி நாளில் வெற்றி யாருக்கு?

மும்பை: மும்பை அணியுடனான ரஞ்சி கோப்பை பைனலில், 538 ரன் என்ற இமாலய இலக்கை துரத்தி வரும் விதர்பா அணி 4ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்துள்ளது. வான்கடே மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் மும்பை 224 ரன், விதர்பா 105 ரன்னில் ஆட்டமிழந்தன. 119 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 418 ரன் குவித்து ஆல் அவுட்டானது (130.2 ஓவர்). முஷீர் கான் 136, கேப்டன் ரகானே 73, ஷ்ரேயாஸ் அய்யர் 95, முலானி 50 ரன் விளாசினர்.

இதைத் தொடர்ந்து, 538 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது.அதர்வா டெய்டே 3, துருவ் ஷோரி 7 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தனர். அதர்வா 32, துருவ் 28 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, விதர்பா 64/2 என திடீர் சரிவை சந்தித்தது. அடுத்து அமான் மொகாடே – கருண் நாயர் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அமான் 32, யாஷ் ராத்தோட் 7 எடுத்து வெளியேற, விதர்பா 133 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், கருண் நாயர் – கேப்டன் அக்‌ஷய் வாத்கர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தனர். கருண் நாயர் 74 ரன் (220 பந்து, 3 பவுண்டரி) விளாசி முஷீர் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தமோர் வசம் பிடிபட, விதர்பா மீண்டும் பின்னடைவை சந்தித்தது. 4ம் நாள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்துள்ளது. அக்‌ஷய் வாத்கர் 56 ரன், ஹர்ஷ் துபே 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். மும்பை பந்துவீச்சில் தனுஷ் கோடியன், முஷீர் கான் தலா 2, ஷாம்ஸ் முலானி 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 5 விக்கெட் இருக்க, விதர்பா வெற்றிக்கு இன்னும் 290 ரன் தேவை என்ற நிலையில், இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

The post கருண் நாயர் 74, அக்‌ஷய் வாத்கர் 56* விதர்பா 5 விக்கெட்டுக்கு 248: கடைசி நாளில் வெற்றி யாருக்கு? appeared first on Dinakaran.

Tags : Karun Nair 74 ,Akshay Vadkar ,Vidarbha ,Mumbai ,Ranji Cup ,Wankhede stadium… ,Karun Nair ,Akshay Wadkar ,Dinakaran ,
× RELATED ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: 42-வது...