×

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதால் பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார்: திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற உத்தரவை ரத்து செய்தார் சபாநாயகர்

* அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு செய்ய ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
* உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார்.

* திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
* தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார். திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து 2016-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட் மறுபடியும் விசாரித்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. இதனால் பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். சட்டப்பேரவை செயலகமும் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தொகுதியை காலியிடமாக அரசிதழில் வெளியிட்டது.

இந்நிலையில் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், குற்றவாளி என தீர்மானித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக 2 நாட்களுக்கு முன் நீதிபதிகள் அறிவித்தனர். அவரது தண்டனைக்கு தடையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த நாளில் இருந்து பொன்முடி மறுபடியும் எம்எல்ஏ ஆகி விட்டதாகவும், ராகுல்காந்தி விஷயத்தில் கடைபிடிக்கப்பட்டது பொன்முடிக்கும் பொருந்தும் என்று திமுக வழக்கறிஞர் வில்சன் எம்.பி. கருத்து தெரிவித்தார். சபாநாயகர் அப்பாவு கூறுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் ராகுல் காந்தி விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதேபோல் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த தீர்ப்பின் நகல் நேற்று இணையதளத்தில் வெளியானது. இதனால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார். மேலும், தீர்ப்பு நகல் சட்டப்பேரவை செயலாளரிடம் கிடைத்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. இதுகுறித்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அரசிதழில் கூறி இருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்றம் 2023, டிசம்பர் 19ம் தேதி சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதைத்தொர்ந்து திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் கடந்த 5ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து நேற்று முன்தினம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடியின் எம்எல்ஏ பதவி மீண்டும் தொடர்வதால் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது என்று மார்ச் 5ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்ப பெறப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார். திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ”இன்று (நேற்று) மாலை அல்லது நாளை (இன்று) காலை அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு செய்ய வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று மாலை வரை எந்த பதிலும் கூறப்படவில்லை. இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை 6.50 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். வரும் 16ம் தேதி பிற்பகல் 12.40 மணிக்கு சென்னை திரும்புகிறார். பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என நேற்று முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளதால் டெல்லி செல்லும் முன் பதவிப்பிரமாணம் செய்து வைப்பாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதால் பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார்: திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற உத்தரவை ரத்து செய்தார் சபாநாயகர் appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Supreme Court ,Speaker ,Thirukovilur ,Chief Minister ,M.K.Stal ,Thirukovilur Constituency ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு