×

குழந்தைகள் மாணவிகள் அச்சம்; நாகர்கோவிலில் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: கட்டுப்படுத்த கோரிக்கை

நாகர்கோவில்: மனிதர்களின் செல்ல பிராணிகளில் முதலிடம் நாய்க்கு தான் உள்ளது. பலர் தங்களது வீட்டில் பல ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கூட நாய்களை இறக்குமதி செய்து வீடுகளில் வளர்க்கிறார்கள். வீடுகளில் செல்ல குழந்தையாகவே நாய்கள் வளருகிறது. ஆனால் தெரு நாய்கள் உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளன. அந்த வகையில் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் தெருக்களில் நாட்டு நாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நாய் குறுக்கே பாயும்போது விபத்தில் சிக்கி உயிர் பலி ஆவதும் தொடர்கதையாக உள்ளது. நாகர்கோவில் மாநகரில் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாய்க்கு கருத்தடை செய்வதற்கு ஒரு நாய்க்கு ரூ.1,300 செலவு செய்யப்படுகிறது. இதற்காக ஒரு தொண்டு நிறுவனம் நாய்க்கான கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டது.

நாகர்கோவில் மாநகர பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடைசெய்து, பராமரித்து, பிடித்த இடத்திலேயே நாய்களை விடவேண்டும். இருப்பினும் நாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தற்போது மாநகரம் முழுவதும் நாய்கள் பெருக்கம் அடைந்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த காலங்களில் நாய்கள் அதிகரிக்கும் போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிடித்து கொல்லப்பட்டு வந்தது. தற்போது நாய்களை கொல்லக்கூடாது. ஆனால் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்குநாள் புதிய புதிய நாய்கள் வந்துகொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் நாகர்கோவில் மாநகர பகுதியில் பல ஆயிரக்கணக்கான வீடுகள், உணவகங்கள் உள்ளன. வீடுகள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவுகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனை தெருக்களின் வாழும் நாய்கள் சாப்பிட்டுவிட்டு அந்த பகுதியிலேயே வசித்து வருகின்றன. இதனால் நாய்களை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. மேலும் சிலர் தெருநாய்களுக்கு கோழிக்கால்கள் மற்றும் இறைச்சிகழிவுகளை கொண்டு போடுகின்றனர். அதனை சாப்பிட்டு விட்டு அவைகள் வாழ்கின்றன.

இந்த தெருநாய்க்களால் பெரிய அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்றார். நகர் முழுவதும் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். ரேபீஸ் என்ற கொடிய நோய் நாய்கள் மூலம் பரவுகிறது. நாய்களின் எச்சில் இருந்து பரவும் இந்த நோய், உயிர் கொல்லி ஆகும். தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படாமல் உள்ளதால், இந்த நோய் தாக்கம் அதிகரிக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் பல இடங்களில் நடக்கிறது. சமூக வலை தளங்களில் இந்த காட்சிகளை பார்க்கும் போது நெஞ்சம் பதறகிறது. எனவே நாகர்கோவில் மாநகரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post குழந்தைகள் மாணவிகள் அச்சம்; நாகர்கோவிலில் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: கட்டுப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Dinakaran ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...