×

அசாம் உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களில் எதிர்ப்பு; சிஏஏ சட்டம் முஸ்லீம்களின் குடியுரிமையை பாதிக்குமா?: கேள்வி – பதில் வடிவில் உள்துறை அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: சிஏஏ சட்டம் முஸ்லீம்களின் குடியுரிமையை பாதிக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ள நிலையில், அசாம் உள்ளிட்ட நாட்டின் பிறமாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடியுரிமை திருத்த சட்டமானது (சிஏஏ) முஸ்லிம்களின் குடியுரிமையைப் பாதிக்காது. அதனால் அதுகுறித்து அவர்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கேள்வி – பதில் வடிவில் ஒன்றிய அரசு அளித்துள்ள விளக்கத்தில், ‘இந்தியாவில் வசிக்கும் 18 கோடி முஸ்லிம் மக்கள் இந்துக்களுக்கு இணையாக சம உரிமை பெற்றுள்ளனர். அவர்களின் குடியுரிமையைப் பாதிக்கும் வகையில் சிஏஏ சட்டத்தில் எதுவும் இல்லை. எந்தவொரு இந்தியக் குடிமகனிடமும், தங்களது குடியுரிமையை நிரூபிக்க ஆவணத்தை சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட மாட்டார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து மத பாகுபாடுகளை எதிர்கொண்ட சீக்கியர்கள், ஜெயின்கள், பார்சிகள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

அவர்கள் 31 டிசம்பர் 2014ம் ஆண்டுக்கு முன் இந்தியா வந்திருக்க வேண்டும். புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவதற்காக மேற்கண்ட மூன்று நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த சிஏஏ-வில் எந்த விதியும் இல்லை. எனவே, சிஏஏ சட்டமானது முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற அச்சம் ஆதாரமற்றது. இந்திய குடியுரிமைச் சட்டத்தின் 6வது பிரிவின்படி, உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் முஸ்லிம்களும் இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.

சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவே சிஏஏ சட்டம் கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் முஸ்லீம்கள் உட்பட எந்த ஒரு நபரும் தற்போதுள்ள சட்டங்களின்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றும் மக்கள் இஸ்லாமிய நாடுகளில் துன்புறுத்தப்படுகிறார்கள். மேலும் அவர்கள் இந்தியாவில் இருக்கும் சட்டங்களின்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அதனை குடியுரிமை திருத்த சட்டம் தடுக்காது’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post அசாம் உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களில் எதிர்ப்பு; சிஏஏ சட்டம் முஸ்லீம்களின் குடியுரிமையை பாதிக்குமா?: கேள்வி – பதில் வடிவில் உள்துறை அமைச்சகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Assam ,Muslims ,Home Ministry ,New Delhi ,CAA ,Union Home Ministry ,Union Government ,Ministry of Home Affairs ,Dinakaran ,
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...