×

பாணாவரம் அருகே விழிப்புணர்வு உடல், மனநல பாதிப்பு ஏற்படுத்தும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும்

*கிராம குழுவினருக்கு அறிவுறுத்தல்

பாணாவரம் : பாணாவரம் அருகே உடல் மற்றும் மனநல பாதிப்பு ஏற்படுத்தும் குழந்தை திருமணத்தை தடுக்க கிராம பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள பெரப்பேரி ஊராட்சியில் கிராம குழுவினருக்கான குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிமகாலிங்கம் தலைமை தாங்கினார். தொழிலதிபர் ராமமூர்த்தி, ஆசிரியை சுஜாதா, அங்கன்வாடி பணியாளர் பத்மா, மகளிர் குழு லட்சுமி, கிராம இளைஞர் குழு கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பார்த்திபன், குழந்தை தொழிலாளர் அகற்றும் முறை திட்ட மேலாளர் நாகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். அப்போது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள், கடமைகள், பெண் குழந்தைகளின் திருமண வயது, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கிராம பாதுகாப்பு குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பெண் குழந்தைகளை இடைநிற்றல் இல்லாமல் தொடர் கல்வி அளிக்கவும், குழந்தை திருமணம் செய்வதால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மன, உடல் ரீதியான பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு, அத்திருமணங்களை கிராம குழு உறுப்பினர்கள் தடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை கண்காணித்து, அவர்கள் மீது தனி கவனம் செலுத்தவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. கிராம பாதுகாப்புக்குழு கூட்டத்தை 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டவும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், மகளிர் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

The post பாணாவரம் அருகே விழிப்புணர்வு உடல், மனநல பாதிப்பு ஏற்படுத்தும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Panavaram ,Village Committee ,Village Security Committee ,Perapperi panchayat ,Panavaram, Ranipet district ,Dinakaran ,
× RELATED பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மலைக்கு...