×

அவிநாசி அருகே பாதுகாப்பின்றி புதைந்து கிடக்கும் 15ம் நூற்றாண்டு சதிக்கல்

*பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அவிநாசி : அவிநாசி அருகே கண்டுபிடிக்கப்பட்ட 15ம் நூற்றாண்டு சதிக்கல் பாதுகாப்பு இன்றி புதைந்து கிடக்கிறது. இதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் ஊராட்சியில் புளியம்பட்டி சாலையோரம் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு இந்த சதிகல்லை சுத்தம் செய்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து முடியரசு கூறியதாவது: 15ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால வகையான அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் (சிதிலமடைந்த சிற்பம்) ஆகும். முதல் நிலையாக போர்க்களக் காட்சி அமைந்துள்ளது. வீரன் வலது கையில் வாளும் இடக்கையில் கேடயமும் வைத்துள்ளான். வீரன் எதிர்கொள்ளும் மற்றொரு வீரனை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிற்பம் சிதைவடைந்துள்ளது.

சதிக்கல்லில் இறுதி நிலையாக வீரன் சிவலங்கத்திற்கு மாலை அணிவித்து சிவபதம் சேர்தல் ஆகும். இவ்வீரன் இப்பகுதியைச் சேர்ந்த சிற்றரசனாகவோ அல்லது தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். இந்த கல் 6 அடி உயரமும், 4 அடி அகலமும், 5 இஞ்ச் கனமுள்ள பலகைக்கல். இந்த கல் அகழ்வாய்ப்பகத்திற்கு எடுத்து சென்றால் பல்வேறு வரலாற்று தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு தெரிவித்திருந்தார்.

அப்போது, இந்த கல்லை பாதுகாக்கும் நடவடிக்கையாக சேவூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டது. மேலும், மாவட்ட கலெக்டர் உத்தரவு வந்தவுடன் அகழ்வாய்ப்பகத்திற்கு எடுத்து செல்லப்படும் என்று அகழ்வாரய்ச்சித்துறை அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று வரை சதிக்கல் எடுத்து செல்லவில்லை.

தற்போது, இந்த கோயிலில் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளதால் செடி, கொடிகள், மண் ஆகியவை சதிக்கல்லை மூடியுள்ளது. இதனால், சதிக்கல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. எனவே, மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் அகழ்வாய்ப்பகத்திற்கோ, அல்லது பாதுகாப்பான இடத்திற்கோ சாதிக்கல்லை எடுத்து செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post அவிநாசி அருகே பாதுகாப்பின்றி புதைந்து கிடக்கும் 15ம் நூற்றாண்டு சதிக்கல் appeared first on Dinakaran.

Tags : Satikkal ,Avinasi ,Avinasi Saveur Panchayat ,Tirupur ,
× RELATED அதிகாரத் திமிரில் அராஜகங்களும்,...