×

தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் சுமை தாங்கி நினைவு கல் கண்டுபிடிப்பு

திருப்பூர் : தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் எழுத்துகளுடன் கூடிய சுமைதாங்கி நினைவு கல் திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பண்டைய தமிழ்ச்சமூகம் வீரத்தை மிக உயர்வாக போற்றியது. அதே அளவிற்கு விருந்தோம்பல் பண்பையும், சக மனிதர் மற்றும் கால்நடைகள் மீதும் அன்பு செலுத்தி போற்றியது என்பதற்கு பல சான்றுகள் நமக்குக் கிடைத்து வருகின்றன. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் சக மனிதர்கள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக அன்னச் சத்திரங்களும், தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல்களும், இரவில் தங்குவதற்கு மடங்களும் கட்டி வைத்தனர்.

மக்களுடன் பயணிக்கும் கால்நடைகளுக்கும் தாகம் தணிக்கும் வகையில் சாலைகளில் உள்ள கிணறுகளுக்கு அருகில் கல் தொட்டிகளும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. பண்டைய காலத்தில் அனைத்து விலை பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க சந்தைகள் ஏற்படுத்தப்பட்டு பொருட்கள் மாட்டு வண்டிகளிலும், தலை சுமைகளிலும் எடுத்துச் செல்வது பண்டைய நடைமுறையாக இருந்தது.

தலைச்சுமையோடு சில மைல்கள் பயணிப்பது சிரமமான காரியம் என்பதால் சந்தை நடைபெறும் கிராமச் சாலைகளில் கிணறுகள் அருகில் சுமை தாங்கி கற்கள் பிறரால் ஏற்படுத்தப்பட்டு இதன் அருகே நீர் அருந்த தொட்டியும், இளைப்பாரிச் செல்ல மரங்களும் நடப்பட்டது ஓர் உன்னதமான செயல். இதன் மூலம் சுமையோடு வருபவர்கள் நின்ற நிலையில் சுமையை இறக்கி வைத்து எடுத்துச் செல்ல எளிதாக இருந்தது.

குறிப்பாக, இந்த சுமைதாங்கி கற்கள் இறந்த கர்ப்பிணி பெண்கள் நினைவாக தமிழகமெங்கும் நடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர் திருப்பூரின் மையப்பகுதியான தென்னம்பாளையத்தில் எழுத்துக்களுடன் கூடிய சுமைதாங்கி கல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இதைப்பற்றி ஆய்வு மைய இயக்குனர், பொறியாளர் ரவிக்குமார் மேலும் கூறியதாவது:

திருப்பூரில் செவ்வாய் அன்று நடைபெறும் வாரச்சந்தையும், வைகாசி மாதத்தில் நடைபெறும் தேர் சந்தையும் கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்றவை. இங்கு பொருட்களை வாங்கி செல்வோர் பயன்படுத்தும் வகையில் சந்தைக்கு கிழக்கே தென்னம்பாளையம் கோயில் மைதான பகுதியில் அமைந்துள்ள கிணற்று மேட்டில் 127 ஆண்டுகளுக்கு முற்பட்ட 13 வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்களுடன் கூடிய ஒரு சுமை தாங்கி கல்லை சாலை விரிவாக்கத்தின் போது கலைந்து விட்ட நிலையில் கண்டறிந்துள்ளோம்.

90 செ.மீ உயரமும், 45 செ.மீ அகலமும் கொண்ட கல்லில் ஆங்கில ஆண்டு 1897ல் ஹேவிளம்பித் தமிழ் ஆண்டில் பங்குனி மாதம் 19ம் தேதி ரங்கபோயன் மகன் கருப்பபோயனால் போடப்பட்ட சுமைதாங்கி என்ற செய்தி காணப்படுகிறது. யார் நினைவாக அமைத்தார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும், இன்று வரை இப்பகுதியில் இம்மக்கள் வாழ்ந்து வருவதும் இதன்மூலம் கொங்கு மண்டல மக்களின் சமத்துவ பண்பையும் குணத்தையும் நாம் உணர முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் சுமை தாங்கி நினைவு கல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamils ,Tirupur ,Thennampalayam ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!