×

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்

*அரசு முதன்மை செயலாளர் பேச்சு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், எதிர்வரும் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடும் வகையில், சீரான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் பேசினார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு அரசு முதன்மை செயலாளர், தொழிலாளர் நல ஆணையர், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு, துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அரசு முதன்மை செயலாளர் பேசியதாவது:தமிழக அரசின் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும், அனைத்து நலத்திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றிட, அனைத்து அரசு அலுவலர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

எதிர்வரும் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடும் வகையில், குடிநீர் விநியோக பணிகளை நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து, அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒரே சீரான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை விரைந்து முடித்தும், ஊராட்சிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு, மின்மோட்டார்கள் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வட்டார அளவிலான கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தா்ர.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஐஎஸ்ஒ தரத்தில் பணியில் சிறந்து விளங்கிய 3 அங்கன்வாடி மையங்களுக்கான ஐஎஸ்ஒ தரச்சான்றிதழ்களை சத்துணவு மைய அமைப்பாளர்களிடம் அரசு முதன்மை செயலாளர் வழங்கினார். முன்னதாக தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில், கலைஞரின் நகரப்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அறிவுசார் மையம், காரிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் பூலாம்பட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம், பைசுஅள்ளியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம், காரிமங்கலம் ரேஷன் கடையினையும் அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடையில் வழங்கும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்ததோடு, திட்டப்பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.36.62 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, டிஆர்ஓ பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Government Principal Secretary ,Dharmapuri ,Government ,Principal Secretary ,Atul Anand ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி