×

2 வாரங்களில் ரூ.7 லட்சம் கோடி திட்டங்கள்: அரசு விழாக்களை அரசியல் விழாக்களாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

 

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் 2 வாரங்களில் மட்டும் சுமார் 7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் தேர்தலுக்காக பிரதமர் தொடங்கி வைப்பதாகவும், அரசு விழாக்களை அரசியல் மேடைகளாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடி நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அடிக்கல் நாட்டில் வருகிறார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுக வெளிப்புற கட்டுமான பணிகள் உள்ளிட்ட 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அண்மையில் அடிக்கல் நாட்டினார். பட்ஜெட்டில் எவ்வித நிதியும் ஒதுக்காமல் தேர்தல் நேரத்தில் தொடங்கப்படும் இத்தகைய திட்டங்கள் எல்லாம் காகிதப்பூ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பீகாரில் 1.19 லட்சம் கோடி, ஜார்க்கண்டில் 35,700 கோடி, மேற்கு வங்கத்தில் 37,400 கோடி, ஒடிசாவில் ரூ.19,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அண்மையில் அடிக்கல் நாட்டியுள்ளார். இதேபோல தெலுங்கானாவில் 62,800 கோடி ரூபாய், காஷ்மீரில் 6,400 கோடி, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், நாகாலாந்து, திரிபுரா, உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ.66,000 கோடி, அசாமில் ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

உத்தரப்பிரதேசத்தில் 34,000 கோடி, அரியானாவில் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கும், குஜராத்தில் 85,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக கடந்த 2 வாரங்களில் மட்டுமே சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்தில் மட்டும் இத்தனை திட்டங்களை தொடங்கி வைப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசு விழாக்களை பிரதமர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக அரசு கடைசி நேரத்தில் திட்டங்களை தொடங்கி வைத்து வாக்குகளை பெற முயற்சி செய்வதாகவும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

The post 2 வாரங்களில் ரூ.7 லட்சம் கோடி திட்டங்கள்: அரசு விழாக்களை அரசியல் விழாக்களாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Narendra Modi ,Union ,
× RELATED அமேதியில் போட்டியிட ராகுல்...