×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் கலெக்டர் ஆய்வு

 

ஊட்டி, மார்ச் 13: ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கிடங்கில் கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 3 தொகுதிகளிலும் 689 வாக்குசாவடி மையங்கள் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களின் போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், கட்டுபாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்., ஆகியவை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை பாதுகாப்பாக உள்ளனவா என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழலில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று கிடங்கு திறக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை கலெக்டர் அருணா பார்வையிட்டார். ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன், ஊட்டி ஆர்டிஓ (பொறுப்பு) சதீஸ், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சீனிவாசன், ஊட்டி வட்டாட்சியர் சரவணகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Fingerpost ,Nilgiris district ,Coonoor ,Kudalur ,Separate ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்