×

மதுரை மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு ஆட்தேர்வு முகாம்: மார்ச் 16ல் நடக்கிறது

 

மதுரை, மார்ச் 13: தமிழகம் முழுவதும் அரசின் 108 மருத்துவ ஆம்புலன்ஸ் மற்றும் இலவச அமரர் ஊர்தி செயல்படுகிறது. இதில் பணிபுரிய ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்தேர்வு முகாம் வரும் மார்ச் 16ம் தேதி மதுரை சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடக்கிறது. ஓட்டுநருக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் உயரம் குறையாமல் இருக்க வேண்டும்.

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டு மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,820 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளர் பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டு படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோ பயோலஜி, பயோடெக்னாலஜி என இதில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.16,020 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தேர்வானவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்படும். தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விபரங்களுக்கு 044- 28888060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு ஆட்தேர்வு முகாம்: மார்ச் 16ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : 108 ,Madurai district ,Madurai ,Tamil Nadu ,Madurai Samayanallur Government ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை