நெய்வேலி, மார்ச் 13: ராஜஸ்தான் மாநில அரசுடன், 125 மெகாவாட் பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம் மற்றும் 1000 மெகாவாட் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை கூட்டு முயற்சியுடன் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிகழ்வில், ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, துணை முதல்வர் தியா குமாரி ஆகியோர் கலந்துகொண்டனர். என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகம் லிமிடெட் ஆகியவற்றிற்கு இடையேயான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், ரூ.7000 கோடிக்கும் அதிகமாக முதலீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிகானீர் மாவட்டத்தில், 125 மெகாவாட் லிக்னைட் பிட்-ஹெட் (சுரங்கத்திற்கு அருகில்) அனல் மின் நிலையம் அமைத்தல் மற்றும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி ஆலையை நிறுவுதல் ஆகியன இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இது மேலும் வலுப்படுத்தும். என்எல்சி இந்தியா நிறுவனம் 2030ம் ஆண்டுக்குள் 6 ஜிகாவாட்டிற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்கத் திறன் உட்பட 17 ஜிகாவாட் திறன் கொண்ட சக்தியாக மாறுவதன் மூலம், மின் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக தன்னை நிலை நிறுத்திக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இவ்வொப்பந்தமானது, என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி மற்றும் ஆர்வியுஎன்எல் நிறுவனத்தின் தேவேந்திர சிங்வி ஆகியோர் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. என்டிபிசி, பிஜிசிஐஎல் மற்றும் ஆர்இசி ஆகியவற்றுடன் உற்பத்தி திறன் மற்றும் பரிமாற்ற அமைப்பு மற்றும் நிதியுதவி ஆகியவற்றைச் சேர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
The post அனல் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் ராஜஸ்தானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.