×

முக்கிய பிரமுகர்களை குறிவைத்து இடி அதிகாரிகள், மும்பை போலீசார் எனக்கூறி பணம் பறிக்க முயற்சி வேலூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு

வேலூர், மார்ச் 13: இடி அதிகாரிகள், மும்பை போலீசார் எனக்கூறி பணம் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் ஆதார் கார்டு, பேன்கார்டு விவரங்களை யாரிடம் தெரிவிக்கக்கூடாது என்று வேலூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக புதிய டெக்னிக் முறைகளை சைபர் குற்றவாளிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதாவது பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் எனக்கூறி தொழிலதிபர்கள், நகைக்கடை அதிபர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்களை போலி செயலி கிளிக் அனுப்பி அதை பதிவிறக்கம் செய்து பணத்தை ஏமாற்றுவது, ஹவாலா போன்ற சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை செய்துள்ளதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 15 நாட்களில் ₹1 கோடிக்கு மேல் இதுபோன்ற மோசடி சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசி உள்ள ஆடிேயா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ‘நாங்கள் மும்பை போலீஸ் பேசுகிறோம், சைபர் கிரைம் போலீஸ் பேசுகிறோம். டெல்லியில் இருந்து பேசுகிறோம் என்று கூறி உங்களுக்கு உண்மையான டாக்குமென்ட் போல அனுப்பி வைப்பார்கள். அதில் அவர்கள் செல்லும் மாநிலத்தின் லோகோ இருக்கும். உங்கள் பெயரில் ஒரு கைது வாரண்ட் காட்டுவார்கள். அதில் ‘சீல்’ இருக்கும். கையெழுத்து இருக்கும். அதை எல்லாம் உங்களிடம் காட்டி உங்களுடைய ஆதார் கார்டு மற்றும் போன் நம்பர் வேறு ஒருவருடன் லிங்க் ஆகி உள்ளது. அதன்மூலம் போதை பொருட்கள் கடத்தி உள்ளார்கள். உங்கள் பெயரில் தேவையில்லாத வழக்குகள் எல்லாம் பதிவாகி உள்ளது. நாங்கள் எடுத்து பார்த்தபோது உங்களின் பெயரில் 50 வழக்குகள் உள்ளது. நீங்கள் இதில் இருந்து போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்றால் எங்களுடைய உயர் அதிகாரிகளிடம் பேசுங்கள் என்று கூறி அவர்களே கம்ப்யூட்டர் காலில் இணைத்து விடுவார்கள். அவர்கள் வீடியோ காலில் வர சொல்லுவார்கள். ஸ்கைப் ஆப் பயன்படுத்த சொல்லுவார்கள். ஸ்கைப் ஆப் இல்லை என்றாலும், அதை டவுன்லோடு செய்ய சொல்லுவார்கள்.

பின்னர் உங்களுடைய வீடியோவை ஸ்கிரீன் ஷேர் செய்ய சொல்வார்கள். எக்காரணத்தை கொண்டும் ஸ்கிரீன் ஷேர் செய்யக்கூடாது. வீடியோ காலில் பேசக்கூடாது. அப்படி ஏதாவது பேசினால் அந்த ஸ்கைப் ஆப்பை டவுன்லோடு செய்யாதீர்கள். நான் காவல் நிலையத்தின் அருகில் தான் இருக்கிறேன். நான் அங்கு எடுத்துக்கொண்டு போய் கொடுக்கிறேன். எந்த நடவடிக்கை எடுக்க இருந்தாலும் எடுங்கள். அங்கு வந்து கைது செய்து கொள்ளுங்கள் என கூற வேண்டும். அவர்கள் என்ன வார்த்தை பேசுவார்கள் என்றால் டிஜிட்டல் அரஸ்ட் என்றும், நீங்கள் யாரிடமும் போகக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது. நீங்கள் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என மிரட்டுவார்கள்.
இது எல்லாம் உண்மை கிடையாது. இது எல்லாமே பொய்யான தகவல். நீங்கள் அவர்களிடம் சகஜமாக பேசலாம். ஐடி கார்டு போல நாம் எங்கு போனாலும் ஆதார் கார்டு பயன்படுத்தி வருகிறோம். ஒரு லாட்ஜில் தங்கினாலும், ஏதாவது புக் செய்வதாக இருந்தாலும் ஆதார் கார்டைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். அந்த மாதிரி ஆதார் கார்டை பயன்படுத்திதான் அவர்கள் முதலில் டார்கெட் செய்வார்கள். அதனால் இதபோல நாங்கள் போலீஸ் பேசுகிறோம்.

நாங்கள் கைது செய்வோம் என்று அமலாக்கத்துறை, இடியில் இருந்து பேசுகிறோம் என்று சொல்வார்கள். அதற்கு நீங்கள், நாங்கள் போலீஸ் ஸ்டேஷன் போகிறோம். நீங்கள் அங்கு வர சொல்லுங்கள். அங்கு வந்து கைது செய்துகொள்ளுங்கள். அல்லது விசாரணை நடத்தி கொள்ளுங்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நீங்கள் தாராளமாக பேசலாம். எக்காரணத்தை கொண்டும் உங்களுடைய ஆதார் கார்டையோ அல்லது பேன்கார்டையோ ஷேர் செய்யக்கூடாது. அவர்கள் பணம் அனுப்ப சொன்னால் அனுப்பக்கூடாது. உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டாம். எந்த ஒரு ஐடி புரூப்பும் தரக்கூடாது. நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் போலீஸ் யூனிபார்ம் மற்றும் போலீஸ் நிலையத்தில் இருந்து வரும் சத்தம்போல வெளிப்படுத்துவார்கள். அதுபோன்ற போட்டோக்களையும், அவர்களது ஐடி கார்டும் அனுப்பி வைப்பார்கள். இது எல்லாம் ரெகுலராக நடந்து வருகிறது. இதில் ஏமாறாமல் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்’. இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

The post முக்கிய பிரமுகர்களை குறிவைத்து இடி அதிகாரிகள், மும்பை போலீசார் எனக்கூறி பணம் பறிக்க முயற்சி வேலூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Vellore ,ED ,Mumbai police ,Aadhaar ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...