×

ஆவடி பகுதியில் கடந்த 2 நாட்களில் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 6 பேர் சிக்கினர்

அம்பத்தூர்: சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 15.1 டன் கடத்தல் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை பெருநகர பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி சென்னை மண்டல கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் துணை கண்காணிப்பாளர் சம்பத் மற்றும் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் போலீசார் ஆவடி பகுதியில் கடந்த 10ம் தேதி ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி இருந்த லாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்ததில் ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. 50 கிலோ எடை கொண்ட 210 மூட்டைகளை (10.5 டன் அரிசி) பறிமுதல் செய்த போலீசார் திருநின்றவூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி (50), செங்குன்றத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (36), திருவாரூரைச் சேர்ந்த சந்தோஷம் (33) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் சடையன் குப்பம், பர்மா நகர் பிரதான சாலையில் போலீசைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற நபரை மடக்கி விசாரணை செய்ததில், அவர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நரேஷ் (33), திருவொற்றியூரைச் சேர்ந்த சேகர் (40) என்பது தெரியவந்தது. அவர்கள் ஆட்டோவில் 50 கிலோ எடை கொண்ட 48 ரேஷ்ன் அரிசி மூட்டைகளை (2,400 கிலோ) கடத்திச் செல்ல முயற்சித்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ரெட்டேரியில் ரேசன் அரிசி கடத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் 50 கிலோ எடை கொண்ட 44 மூட்டைகளை (2,200 கிலோ ரேஷன் அரிசி) பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த சக்திவேல் (42) மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆவடி பகுதியில் கடந்த 2 நாட்களில் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 6 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Ampathur ,CID ,Chennai ,Avadi ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...