×

12 சவரன், பணம் திருடு போன வழக்கில் உறவினர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய வாலிபர் கைது: நகையை விற்று விலை உயர்ந்த செல்போன் வாங்கியது அம்பலம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் 12 சவரன் மற்றும் பணம் திருடு போன வழக்கில் உறவினர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகையை விற்று வாலிபர் விலை உயர்ந்த செல்போன் வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள திருவாசகம் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் சென்னை மீன்வளத் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் ஸ்ரீதர் காக்களூர் பைபாஸ் சாலையில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி விஜயலட்சுமி பணியின் பயிற்சிக்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சென்றிருக்கிறார். அன்று வழக்கம்போல் கடைக்குச் சென்ற ஸ்ரீதர் மதியம் சுமார் 3 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கட்டில் டிராயரில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தில் ரூ.10 ஆயிரம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சந்தேகத்தின் பேரில் பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் இருந்த 30 சவரன் நகையில் 12 சவரன் நகை மாயமானதும் தெரியவந்தது. வீட்டின் கீழ்தளத்தில் ஸ்ரீதரின் பெற்றோர் வசித்து வருவதால், மேல் பகுதியில் உள்ள தனது வீட்டுச் சாவியை ஜன்னல் அருகே ஸ்ரீதர் வைத்து விட்டுச் செல்வது வழக்கம். இதனை பயன்படுத்தி வீட்டுக்குள் இருந்த 12 சவரன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீதர் திருவள்ளூர் டவுன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரின் உறவினரான வடிவேல் என்பவரின் மகன் மோகனவேல் (18) அடிக்கடி ஸ்ரீதர் வீட்டுக்கு வந்து சென்றதும், வீட்டுச் சாவியை எங்கே வைப்பார்கள் என்பதை அறிந்து ஸ்ரீதர் கடைக்குப் போன பிறகு நகை மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் ஆகியோர் மோகனவேலை நேற்று கைது செய்தனர். இதில் திருடிய 12 சவரனில் 3 சவரன் நகையை விற்று அதில் ஒரு விலை உயர்ந்த செல்போனை வாங்கிய மோகனவேல், மீதி ஒரு லட்சம் ரூபாயை கையில் வைத்திருந்தார். எனவே அவரிடமிருந்து 9 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

The post 12 சவரன், பணம் திருடு போன வழக்கில் உறவினர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய வாலிபர் கைது: நகையை விற்று விலை உயர்ந்த செல்போன் வாங்கியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : 12 Sawaran ,Ambalam ,Tiruvallur ,Thiruvallur ,sawan ,Tiruvallur Govt ,Savaran ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...