×

தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி

மதுரை: நடிகர் தனுஷை தங்களது மகன் என உரிமை கோரி, மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர், மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனுஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மேலூர் நீதிமன்றத்திலுள்ள வழக்கை ரத்து செய்தது. இந்த வழக்கில் தனுஷ் தனது கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கதிரேசன், மதுரை ஜேஎம் 6ம் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கதிரேசனின் குற்றச்சாட்டில் போதுமான முகாந்திரம் இல்லையெனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு செய்திருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ‘‘தவறான உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது மட்டுமின்றி, தன் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு தேவையான எந்தவித ஆதாரங்களும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றம் நடந்ததை நிரூபிக்க எந்தவித ஆவணங்களும் இல்லை. இது ஒரு அபத்தமான வழக்கு என்பதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

The post தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Dhanush ,Madurai ,Katiresan ,Meenakshi ,Melur, Madurai ,Melur ,Dinakaran ,
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்