×

கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார்

சூலூர்: கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர் உடல் நல குறைவால் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று பாதிப்புடன் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 56. அவரது உடல் இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்திற்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் அங்குள்ள பிரதான மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஆதீன வளாகத்திலேயே ஆதீனம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர் மறைவுக்கு முதலமைச்சர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரின் பெற்றோர் கந்தசாமி தேவர் மற்றும் குணவதியம்மாள் 19ம் நூற்றாண்டில் கோவை காமாட்சிபுரம் பகுதியில் குடியேறினர். இவர்களுக்கு 5வது குழந்தையாக பிறந்தவர் சிவலிங்கேஸ்வரர். இதே பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட, நொய்யல் ஆற்றில் கிடைத்த அம்மன் சிலையை எடுத்து வந்து ஆற்றங்கரை ஓரத்தில் நிறுவி அதற்கு தினமும் பூஜைகள் செய்து வந்தார். பின்னாளில் அது அங்கு பரமேஸ்வரி கோயிலாக மாறியது.

இவரது ஆன்மீக ஈடுபாட்டால் காமாட்சிபுரி ஆதீனத்தை நிறுவி அதன் தலைவராக இருந்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் காமாட்சிபுரி ஆதீன வளாகத்தில் கொரோனா தேவிக்கு சிலை அமைத்து நோய் தொற்று நீங்க சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வழிபாடு மேற்கொண்டது நாடு முழுவதும் பேசுபொருளானது. தமிழகத்தில் உள்ள மூத்த ஆதீனங்களில் ஒருவரான இவர், விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல கோயில்களை தனது சொந்த செலவில் புனரமைத்து குடமுழுக்கு செய்துள்ளார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் தவத்திரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். மேற்கு மண்டலத்தில் ஆன்மீக வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுக்காக பாடுபட்ட அப்பழுக்கற்ற துறவியான சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்திய பெருமைக்குரியவர். தமிழை பரப்புவதை தமது வாழ்நாள் பணியாக மேற்கொண்டு வந்த அவர், பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் குருபூஜை செய்யும் உரிமையை பெற்றவர் ஆவார். பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழ்மொழியை பரப்பி வந்த அவர், பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களை தங்க வைத்து, அவர்கள் கல்வி கற்க உதவிகளையும் புரிந்து வந்தார். தொண்டிலும், துறவிலும் சிறந்து விளங்கிய சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் மறைவு தமிழ் சமயநெறிக்கும், தமிழ்மொழி வழிபாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது சீடர்களுக்கும், மாணவர்களுக்கும், சமயப் பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kamachipuri Atheenam ,Sulur ,Kamachipuri ,Atheenam Sivalingeswar ,Kamachipuri Atheenam Sivalingeswar ,Kamachipuri Athinam ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்