×

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். பாரிபா ஓபனில் 5 முறை சாம்பியனான ஜோகோவிச் (36 வயது, செர்பியா), இம்முறை 3வது சுற்றில் இத்தாலியின் லூகா நார்டியுடன் (20 வயது, 123வது ரேங்க்) மோதினார். அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் வீரரிடம் 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார்.

விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 20 நிமிடங்களுக்கு நீடித்தது. ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடரில் நம்பர் 1 வீரரை வீழ்த்திய தரவரிசையில் மிகவும் பின்தங்கிய வீரர் என்ற பெருமை லூகா நார்டிக்கு கிடைத்துள்ளது. இவர் கடந்த மாதம் நடந்த சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடரில் 2வது இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பைனலில் இந்திய வீரர் சுமித் நாகலிடம் மோதிய நார்டி தோல்வியை சந்தித்தார். தொடர்ந்து பெங்களூருவில் நடந்த ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்ற லூகா 2வது சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதனிடம் தோற்று வெளியேறினார். அதன் பிறகு பாரிபா தொடரில் விளையாடும் லூகா தகுதிச் சுற்று மூலம் முதன்மைச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

2024 ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரையிறுதியில் இத்தாலியின் யானிக் சின்னரிடம் (22 வயது) தோற்ற ஜோகோவிச், முன்னதாக ஆஸி.யில் நடந்த யுனைட்டட் கோப்பை போட்டியிலும் தன்னைவிட வயதில், தரவரிசையில் குறைந்த அலெக்ஸ் டி மினாரிடம் காலிறுதியில் தோல்வியை சந்தித்தார். நடப்பு சீசனில் விளையாடிய 3 தொடரிலும் பட்டம் வெல்ல முடியாதது ஜோகோவிச்சை மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றொரு 3வது சுற்றில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் 6-4, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தினார்.

The post பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்! appeared first on Dinakaran.

Tags : BNP Paribas Open Chennai Open ,Djokovic ,Novak Djokovic ,BNP Paribas Open ,US ,Serbia ,Paribas Open ,Dennis Djokovic ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்