சென்னை: 8 வீடுகளைக் கொண்ட 14 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடங்கள், 8070 சதுர அடி கொண்ட அனைத்து வீடுகள் மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்று பெற வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2019ம் ஆண்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளை தமிழக அரசு புதிதாக வெளியிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அனுமதியற்ற, விதிமீறல் கட்டிடங்களை தடுக்கும் பொருட்டு, பெரிய கட்டிடங்களுக்கு, உரிய அதிகார அமைப்பிடம் கட்டிட நிறைவுச்சான்று பெற வேண்டுமென்பது, அந்த விதிமுறைகளில் கட்டாயமாக்கப்பட்டது. வணிக கட்டிடங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைத் தடுக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட இந்த விதிமுறைகளில், பெரிய குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தடையின்மை சான்று இருந்தால் மட்டுமே மின்சாரம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு தர வேண்டும் என கூறப்பட்டது.
அதிலும், 3 வீடுகளை கொண்ட 12 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடங்கள், 8,070 சதுர அடிக்கு மூன்று வீடுகள் வரையிலான ஒரே குடியிருப்புக்கு கடந்த ஆண்டே விலக்களிக்கப்பட்டது. கட்டிட நிறைவு சான்று பெற வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து, எட்டு வீடுகள் வரை விலக்கு அளிப்பதற்கு, விரைவில் அரசாணை வெளியாக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே கட்டிடத்தில் 8 வீடுகளைக் கொண்ட 14 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடங்கள், 8070 சதுர அடி கொண்ட அனைத்து வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள் மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்று பெற வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையானது அரசாணை வெளியிட்டுள்ளது.
The post 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.