×

100வது டெஸ்டில் அவர் பேசியதை மறக்கமுடியாது; ராகுல் டிராவிட் எனக்கு பெரிய அண்ணன்.! ரவிச்சந்திரன் அஸ்வின் நெகிழ்ச்சி

சென்னை: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்டில் ஆடி சாதனை படைத்துள்ளார். இதனை முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தநிலையில் தனது யூடியூப் சேனலில் ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பேசியதாவது: எனது 100வது டெஸ்ட் போட்டிக்கு இப்படியான ஒரு வரவேற்பும், வாழ்த்தும் இருக்கும் என்று நினைத்ததில்லை. கிரிக்கெட்டை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் விளையாடுவேன். ரசிகர்களுக்காகவோ, கொண்டாட வேண்டும் என்பதற்காகவோ விளையாடாமல், எனக்காகவே விளையாடி இருக்கிறேன்.

ஆனாலும் இந்த 100வது போட்டிக்கு எனக்கு கிடைத்த வாழ்த்துகள் நெகிழ வைத்துவிட்டது. மைதானத்திற்கு பலரும் எனக்காக நேரில் வந்ததாக கூறினார்கள். 100வது டெஸ்ட் போட்டி எனக்கு மட்டுமல்லாமல் எனது குடும்பத்தினருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா என்று அனைவரும் ஸ்பெஷலாக உணர்ந்தார்கள். இந்த போட்டிக்கு முன் ராகுல் டிராவிட் ஒரு ஸ்பீச் ஒன்றை கொடுத்து எனக்கு 100வது டெஸ்ட் கேப்பை கொடுத்தார். அப்போது அவர் பேசியதை என்னால் மறக்கமுடியாது. ஏனென்றால் 2008ம் ஆண்டு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்தாலும், 2014ம் ஆண்டு வரை தெருக்களில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்.

ராமகிருஷ்ணா நகர் அண்டர் ஆம் அசோசியேஷன் என்று ஒரு அணியை வைத்திருந்தோம். அந்த அணி சார்பாக கிரிக்கெட் தொடர்களை நடத்தி இருக்கிறோம். அதனையெல்லாம் ராகுல் டிராவிட் தொட்டு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வீரராகவும் ராகுல் டிராவிட் உடன் விளையாடி இருக்கிறேன். ஆனால் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வேறு மாதிரி உணர்வை கொடுக்கிறார். ஒரு பெரியண்ணனை போல் உணர வைத்துவிட்டார். அவருடன் நான் எந்த கருத்தையும் கூறி ஆலோசிக்க முடியும். அந்த அளவிற்கு எனக்கும் அவருக்குமான உறவு உள்ளது. இவ்வாறு அஸ்வின் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

The post 100வது டெஸ்டில் அவர் பேசியதை மறக்கமுடியாது; ராகுல் டிராவிட் எனக்கு பெரிய அண்ணன்.! ரவிச்சந்திரன் அஸ்வின் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Test ,Rahul Dravid ,Ravichandran Ashwin ,Chennai ,Tamil Nadu ,YouTube ,Ravichandran Ashwin Leschi ,
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...