×

கோடையில் குடிநீர் பற்றாக்குறை அபாயம் தடுக்க கிணறுகளை தூர் வார வேண்டும்

*நகராட்சி கூட்டத்தில் துணை தலைவர் கோரிக்கை

ஊட்டி : கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை தூர்வாரி, நீரை பயன்படுத்தும் அளவிற்கு சுத்தம் செய்ய வேண்டும் என நகராட்சி துணை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் ரவிக்குமார், ஆணையர் ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர் ஜார்ஜ் (திமுக): காந்தல் முக்கோணம் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு அசுத்தமாக காட்சியளிக்கிறது. காந்தல் பகுதியில் நகராட்சி குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தனியார் ஒப்பந்தாரர் குறைந்த பணியாளர்களை வைத்து வேலை செய்து வருகிறார். அங்கு போதுமான அளவு பணியாளர்கள் வைத்து வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும். அருகிலேயே நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து துணி கடை அமைக்கப்பட்டுள்ளது.

என்சிஎம்எஸ் பகுதியில் அண்மையில் செப்பனிடப்பட்ட கான்கீரிட் சாலை தரமில்லாத காரணத்தால் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த சாலை பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை அழைத்து சாலையை சரி செய்ய வேண்டும். அவரை பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும். நகராட்சி வார்டு வரைமுறை செய்ததில் குளறுபடிகள் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். இதற்கு ஆணையர் ஏகராஜ் பேசுகையில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

முஸ்தபா: மணிக்கூண்டு பகுதியில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி அவ்வழியாக செல்வோர் முகம் சுளிக்கின்றனர். ஊட்டி ஏடிசி பகுதியில் அமைக்கப்பட்டு தற்காலிக கடைகளுக்கு மாத வாடகை ரூ.6000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை குறைக்க வேண்டும். எனது வார்டு தண்ணீர் பிரச்னை அதிகமாக உள்ளது.

12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது. இது ஒரு செயற்கையான தண்ணீர் பஞ்சம். இதற்கு காரணம் ஆர்கே.,புரம் நீரேற்று நிலையத்தில் மோட்டார் பழுது தான் காரணம். எனவே புதிய மோட்டார் வாங்கி பொருத்த வேண்டும். மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது லாரி மூலம் தண்ணீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர் ஏகராஜ்: மணிக்கூண்டு பகுதியில் குப்பைகள் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறைக்க வாய்ப்பில்லை.

தம்பி இஸ்மாயில்: நகராட்சி ஊழியர்கள் முறையாக வேலை செய்வதில்லை. வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் அழைத்து பேசினாலும் அதனை கண்டுகொள்வதில்லை. காந்தல் பகுதியில் உள்ள கால்வாயை தூர்வார வேண்டும்.

ஆணையர்: பணியாளர்கள் பற்றாகுறை உள்ளது. இருந்த போதும் கவுன்சிலர்கள் தெரிவிக்கும் பிரச்னைகளை தீர்வு காண ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும். காந்தல் கால்வாய் தூர்வாறுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

துணை தலைவர் ரவிக்குமார்: எனது வார்டிற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கழிவு நீர் பிரச்சனை உள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்தால் கண்டு கொள்வதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக எனது வார்டில் எந்த வித வளர்ச்சி பணிகளும் செயல்படுத்தப்படவில்லை.

தலைவர் வாணீஸ்வரி: டெண்டர் விடப்பட்ட பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.

துணை தலைவர் ரவிக்குமார்: நகராட்சி டெண்டர் பணிகளை எடுக்கும் ஒப்பந்தாரர்கள் பணிகளை துவக்க தாமதப்படுத்தாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சில ஒப்பந்ததாரர்கள் நகருக்குள் வரும் வேலைகளை டெண்டர் எடுத்து விரைவாக செய்கின்றனர். ஆனால் வார்டு பகுதிகள், மேடான பகுதிகளில் பணிகள் மேற்கொள்ள விடப்படும் டெண்டர்களை எடுப்பதில்லை. எனவே பணிகளை தரமின்றியும், தாமதமாக மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் வார்டு பகுதிகளில் வேலை செய்ய தயங்கும் ஒப்பந்ததாரர்களை பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும்.

அபுதாகீர்: இன்று நடப்பது 25-வது நகர்மன்ற கூட்டம். காந்தல் ஸ்லேட்டர் அவுஸ் சுகாதாரமற்று உள்ளது. ரத்தம் கலந்த கழிவுநீர் குடியிருப்புகளுக்கு மத்தியில் வழிந்தோடுகிறது. இதனை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. போராடாமல் எந்த பலனும் கிடைக்காது.

ஆணையர்: ஸ்லேட்டர் அவுஸ் பகுதியில் நகராட்சி பொறியாளருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு உரிய தீர்வு காணப்படும். மேலும் கீதா (திமுக) மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் பேசுகையில், ஊட்டி நகராட்சியில் பணியாற்றும் மேஸ்திரி இளங்கோ எவ்வித பணியையும் முறையாக மேற்கொள்வதில்லை. எப்போது அழைத்து பேசினாலும் தட்டி கழிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, ஊட்டி நகராட்சியில் வீடு வீடாக சென்று குப்பைகளை அகற்றும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒப்பந்ததாரர் முறையாக குப்பைகளை அகற்றுவதில்லை.

இதனால் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்கி அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி அனைத்து கவுன்சிலர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

துணை தலைவர் ரவிக்குமார்: கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் நீராதாரங்களில் தண்ணீர் மிகவும் குறைவான நீரே உள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே நகராட்சிகளில் உள்ள அனைத்து கிணறுகளையும் தூர்வாரி அந்த நீரை பயன்படுத்துகின்ற அளவிற்கு சுத்தம் செய்து கிணறுகளை புனரமைக்க வேண்டும்.

ஊட்டியின் முக்கிய நீராதாரமாக பார்சன்ஸ்வேலி அைணயில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நகராட்சி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மின் உற்பத்திக்கு இந்த நீரை பயன்படுத்த கூடாது. குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் கோரிக்கை வைக்க வேண்டும். நகரம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கட்டிட கழிவுகள், குப்பைகள், செடி கொடிகளை அனைத்தையும் அப்புறப்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும். சாலையோரங்களில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். ஊட்டி நகரை தூய்மையாக வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நாகமணி (திமுக): எனது 2வது வார்டை 8-வது கவுன்சிலர் ஆக்கிரமித்துள்ளார். எனது வார்டிற்கு வரும் அனைத்து பணிகளையும் அவரது வார்டு என கூறி எடுத்து கொள்கிறார். எனவே வார்டு வரையறை செய்து பிரித்து தர வேண்டும்.

மேலும் குமார் (அதிமுக) பேசுகையில், 2வது வார்டு கவுன்சிலரின் கணவரின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. என்னை பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என கூறி பாதாகையுடன் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது கவுன்சிலர் நாகமணியும் எனது இரண்டாவது வார்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐசியுவிற்கு அனுப்பிய ஏஈ சண்முக சுந்தரத்திற்கு கண்டனம் என கூறி பாதாகையுடன் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆணையர் பேசுகையில், வார்டு பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் எழுந்து சென்றனர். இதையடுத்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.

The post கோடையில் குடிநீர் பற்றாக்குறை அபாயம் தடுக்க கிணறுகளை தூர் வார வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Wells ,Vice President ,Ooty ,Dinakaran ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!