×

மார்த்தாண்டம் லாரி பேட்டை முன் போக்குவரத்துக்கு இடையூறாக மீன் மொத்த வியாபாரம்

மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் லாரிப்பேட்டை முன் போக்குவரத்துக்கு இடையூறாக மீன் மொத்த வியாபாரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.மார்த்தாண்டத்தில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அதிக மக்கள் கூடுவதால் மார்க்கெட்டில் எப்பொழுதும் நெருக்கடியாக காணப்படுகிறது. மேலும் அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே இந்த மார்க்கெட்டை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நகர் மன்ற தலைவர் பொன். ஆசைதம்பியின் முயற்சியால் அமைச்சர் மனோ தங்கராஜ் அதற்கான பணியினை தொடங்கி வைத்தார். தற்போது மார்க்கெட்டில் பணி துரிதமாக நடந்து வருகிறது அருகில் உள்ள லாரி பேட்டையில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட்டை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

லாரி பேட்டையில் கடந்த சில வருடங்களாக மீன் இறக்கு தளமாகவும், மீன் கமிஷன் கடையாகவும் வெளியூரிலிருந்து மீன்களைக் கொண்டு வந்து இறக்கி விற்பனை செய்து வந்தனர். ஆனால் மீன் விற்பனைக்கு மார்க்கெட்டில் விசாலமான இடத்தில் தனி மீன் மார்க்கெட் உள்ளது.இந்நிலையில் லாரி பேட்டையில் தற்காலிக காய்கறி கடை அமைக்க பணி தொடங்க சென்றபோது மீன் வியாபாரிகள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் அங்கு தற்காலிக காய்கறி மார்க்கெட் பணி தொடங்க முடியாமல் போனது. இதை அடுத்து அங்கு பதட்டமும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது கலெக்டர் தரப்பில் 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதற்குள் இவர்கள் மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில் 6 மொத்த வியாபாரிகளும் கையெழுத்திட்டனர்.

அதன் பிறகும் மேலும் 5 நாள்கள் கொடுக்கப்பட்டது. நல்லூர் பேரூராட்சி பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்ட போது அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து குழித்துறை நகராட்சி சார்பில் அதிகாரிகள் இரவு லாரி பேட்டையை மூடி பூட்டினர். அதன் பிறகு மீன் வாகனங்கள் இந்தப் பகுதியில் ரோட்டில் நின்று மொத்த வியாபாரம் செய்தனர். வாகனங்கள் வருவதும் ஆட்டோ டெம்போ போன்றவைகளில் மீன் கொண்டு செல்வதும் தொடர்கதையாக காணப்பட்டது.

இதனால் இந்த பகுதி கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பொது மக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இவர்கள் தொழிலும் பாதிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட இந்த பகுதி ஆட்டோ டிரைவர்கள் மீன் மொத்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் இந்தப் பகுதி ஐஎன் டியுசி ஆட்டோ டிரைவர் சங்க கவுரவ தலைவர் தயாசிங், தலைவர் விஜின் ராஜ் தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷன் நேற்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.மீன் மொத்த வியாபாரம் லாரிகள் இந்த பகுதியில் நிறுத்தப்படுவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் மீன் கழிவுநீர் பாய்வதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

குடிநீர் லாரிகள் நிறுத்தம்

இந்த நிலையில் குழித்துறை நகராட்சி குடிநீர் விநியோக லாரிகள் இரண்டு நேற்று லாரிப்பேட்டை முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மீன் மொத்த வியாபாரம் நேற்றும் தொடர்ந்தது.

The post மார்த்தாண்டம் லாரி பேட்டை முன் போக்குவரத்துக்கு இடையூறாக மீன் மொத்த வியாபாரம் appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Marthandam Lorry ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...