×

காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஒன்றியத்தில் கசுக்குட்டா ஒட்டுண்ணி தாவரத்தால் 2 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் பாதிப்பு

*விவசாயிகள் கவலை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 7 ஆயிரத்து 250 ஏக்கர் உளுந்து பயிரும், 600 ஏக்கர் பச்சைப் பயிறும், குமராட்சி ஒன்றியத்தில் 12 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிரும், 7 ஆயிரத்து 500 ஏக்கர் பச்சை பயிரும் நடப்பு ஆண்டில் அப்பகுதி விவசாயிகளால் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உளுந்து பயிர்கள் விளைந்து பிஞ்சுகள் வைக்கும் தருவாயில் கசுகுட்டா எனப்படும் ஒட்டுண்ணி தாவரம் படர்ந்து காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி ஒன்றியங்களில் தல 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக 5 மூட்டைகள் விளையும் நிலத்தில் 1 மூட்டை அறுவடை செய்வதே சவாலான காரியமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து கவலை தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் கூறும்போது; விதை இல்லாமல், வேர் இல்லாமல் பரவி வரும் இந்த ஒட்டுண்ணி தாவரம் உளுந்து பயிர் விதைக்கும்போது பரவுகிறது. மற்ற நேரங்களில் இதயத்தின் தண்டுகள், கிழங்குகள் வயலில் புதைந்து கிடக்கும். ஏர் ஓட்டும்போதும், ஆடு, மாடுகள் நடந்து செல்லும்போதும் அதனுடன் ஒட்டிக்கொட்டு வண்டல் மற்றும் சகதிகள் மூலமாக பிற வயல்களுக்கும் விரைவாக பரவி வருகின்றது. களைக்கொல்லி மருந்துகளுக்கும் கட்டுப்படாத இந்த ஒட்டுண்ணி தாவரம் சிறு சிறு துண்டுகளாக கிடந்தாலும் அதன் மூலம் மிக விரைவாக பரவிவிடும்.

நஷ்டத்தை அளிக்கும் வகையிலான இதுபோன்ற ஒட்டுண்ணி தாவரங்களை கட்டுப்படுத்த அல்லது ஒழிக்கும் விதமாக வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள்,
வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும். ஒட்டுண்ணி தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் பட்சத்தில் வரும் ஆண்டுகளில் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து விவசாயிகள் மீள முடியும் என தெரிவித்தனர்.

The post காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஒன்றியத்தில் கசுக்குட்டா ஒட்டுண்ணி தாவரத்தால் 2 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kattumannarko, Kumaratchi Union ,Kattumannarkoil ,Kattumannarkoil Circle ,Kumaratchi Union ,
× RELATED மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது