×

கல்வராயன்மலையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

கல்வராயன்மலை : கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ளது கல்வராயன்மலை. இந்த மலையில் சுமார் 172 சிறு, பெரிய கிராமங்கள் அடங்கிய 15 ஊராட்சிகள் உள்ளன. இந்த கல்வராயன்மலை சுற்றுலாத்தலத்துக்கு உகந்த இடமாகும். இங்கு நீர்வீழ்ச்சிகள், அருவிகள், ஓங்கி உயர்ந்த மலைகள், படகு குழாம் என பல்வேறு சிற்பம்சங்கள் உள்ளன. இந்த மலையை சுற்றிப்பார்க்க பேருந்துகளில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மலையில் போதிய பேருந்து வசதி இல்லாததால் அவர்களால் சரிவர சுற்றிப்பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். கல்வராயன்மலையில் திமுக ஆட்சியில் தான் பெரும்பாலான கிராமங்களுக்கு மண் சாலை அமைக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் மின்சார வசதி, குறைந்த மின்னழுத்தம் உள்ள இடங்களில் டிரான்ஸ்பார்ம் அமைத்து மின்சார வசதி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் பிரதம மந்திரி திட்டம், அரசு மூலம் பல கோடி நிதி ஒதுக்கியும் மலையில் வனத்துறையின் அடாவடியால் சாலை அமைக்கப்படவில்லை. உதாரணமாக வெள்ளிமலை-சின்னத்திருப்பதி சாலை கடந்த 10 ஆண்டுகளாக நிதி ஒதுக்கியும் தார் சாலை போட முடியாமல் உள்ளது.

இதனால் இப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெள்ளிமலை, கொட்டபுத்தூர், தொரடிப்பட்டு எழுத்தூர், மேல்பாச்சேரி ஆகிய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெள்ளிமலை வர வேண்டுமென்றாலும், மாணவர்கள் பள்ளி மற்றும் மேற்படிப்புக்கு செல்ல வேண்டுமென்றால் இச்சாலையை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இச்சாலையை சீரமைத்து மலைவாழ் மக்களின் நலன் கருதி உடனடியாக இச்சாலையில் மினி பேருந்து வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கல்வராயன்மலையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED தொடர்ந்து வெயில் வாட்டிய நிலையில் கல்வராயன்மலையில் திடீர் மூடுபனி