×

வேர்கிளம்பி பேரூராட்சியில் ₹4.47 கோடி வளர்ச்சி திட்ட பணிகள்

*அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்

குலசேகரம் : தமிழ்நாட்டில் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றது முதல் எல்லா துறைகளிலும் வளர்ச்சி திட்டங்கள் வேகமாக நடைபெறுகிறது. குமரி மாவட்டத்திலும் முன் எப்போதும் இல்லாத அளவு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பேரூராட்சிகள், ஊராட்சிகள் வாயிலாக மக்களின் அடிப்படை கட்டமைப்பு தேவைகள் குறித்து கண்டறியப்பட்டு திட்டம் வகுக்கப்படுகிறது. இந்த திட்டங்களில் மக்களின் உடனடி தேவைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் சாலைகள், குடிநீர் திட்டங்கள், தெருவிளக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு குமரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் பல நூறு கோடி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இவை தவிர சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள், வேளாண்மை திட்டங்கள், குளங்கள், கால்வாய்கள் சீரமைப்பு பணிகள், நெடுஞ்சாலைதுறை பணிகள், உயர்மட்ட பாலங்கள், நவீன பஸ் நிலையங்கள் என பல நூறு கோடி வளர்ச்சி திட்டங்கள் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கு அமைச்சர் மனோதங்கராஜ் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு ஒவ்வொரு துறைகள் மூலமும் குமரி மாவட்டத்துக்கு பெருமளவு நிதி பெற்று வருகிறார். அதில் வேர்கிளம்பி பேரூராட்சியில் சாலைகள் சீரமைப்பு, குளம் சீரமைப்பு போன்றவற்றுக்கு ரூ.4.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வேர்கிளம்பி பேரூராட்சி ஒட்டலிவிளையிலிருந்து கூடதூக்கி வழியாக மலவிளை செல்லும் சாலை சுமார் 15 ஆண்டுகளாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது சீரமைப்பு செய்ய நபார்டு திட்டத்தில் ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பூவன்கோடு – தாணிவிளை சாலையில் உள்ளது குமரன்குடி நெடுமானூர் குளம். இந்த குளம் அந்த பகுதியில் சுற்று வட்டார மக்களுக்கு பெரிதும் பயன்படுவதுடன் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கியது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் அழிந்து போகும் நிலையில் இருந்தது. தற்போது இதனை பக்கச்சுவர் கட்டி சீரமைக்க ரூ.48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று கொட்டறவிளை – கல்லக்காவிளை சாலை உட்பட 9 மண் சாலைகள் பேவர் பிளாக் சாலைகளாக சீரமைக்க ரூ.1.49 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்பிரைட், ஒன்றிய அவை தலைவர் மவுண்ட்மேரி மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திலிப்குமார், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங் குமார், துணை தலைவர் துரைராஜ் மனுவேல், சுற்று சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேவியர், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், கவுன்சிலர் ஸ்டாலின் தங்கராஜேஷ், முன்னாள் கவுன்சிலர் ஹென்றி தாமஸ், நிர்வாகிகள் அன்பழகன், அப்ரின் சில்வான்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வளர்ச்சி திட்டங்களில் சாதனை

திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்பிரைட் கூறுகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் பொற்கால ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற சிந்தனையுடன் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் விரும்பும் திட்டங்கள் நமக்கு கிடைக்கிறது. குமரி மாவட்டத்தில் எத்தகைய வளர்ச்சி திட்டங்கள் நமக்கு தேவை என்பது குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கோரிக்கைகளுக்கும் முதலமைச்சர் சளைக்காமல் நிதியை அள்ளி வழங்குகிறார். இதனால் குமரி மாவட்டம் வளர்ச்சி திட்டங்களில் சாதனை படைக்கிறது. கிராம புறங்கள், நகர பகுதிகள் என எல்லா இடங்களிலும் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்துக்கு திமுக அரசு வளர்ச்சி திட்டங்களை வாரி வழங்குகிறது. இதற்கு அமைச்சர் மனோதங்கராஜ் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவரது முயற்சியால் பெரும்பாலான பகுதிகளிலும் முந்தைய ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் விட்ட சாலைகள் இன்று நவீன சாலைகளாக மாறிவிட்டது. பெரும்பாலான கிராம சாலைகளும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

இன்று அவைகள் தார் சாலைகளாகவும், கான்கிரீட் சாலைகளாகவும், பேவர் பிளாக் சாலைகளாகவும் மாறி வருகிறது. இதே போன்று குமரி மாவட்டத்தின் செழுமைக்கும் பசுமைக்கும் காரணமான குளங்கள் ஆண்டு கணக்கில் பராமரிப்பு இல்லாததால் காணாமல் போகும் நிலை இருந்து. இன்று அவைகளை கண்டறிந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து அவைகள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. திமுக அரசின் இத்தகை பணிகள் குமரி மாவட்டத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வேர்கிளம்பி பேரூராட்சியில் ₹4.47 கோடி வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Tags : Worekalambi Municipality ,Minister ,Manothankaraj ,M.K. Stalin ,Chief Minister ,Tamil Nadu ,Kumari district ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...