×

தமிழ் மக்களின் கலாச்சாரத்தை கால்டுவெல் போன்ற மிஷனரிகள் அழிக்க முற்பட்டனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் சர்ச்சை பேச்சு

சென்னை: தமிழ் மக்களின் கலாசாரத்தை அடையாளத்தை கால்டுவெல் போன்ற மிஷனரிகள் அழிக்க முற்பட்டனர் என்று ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் சர்ச்சையை கிளப்பி பேசியுள்ளார். பேராசிரியர் எம்.எல். ராஜா எழுதிய ‘பழந்தமிழ் இலக்கியங்களில் பாரதப் பண்பாடு’ மற்றும் ‘தமிழ் கல்வெட்டுக்களில் பாரதப் பண்பாடு’ புத்தக வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சோகோ நிறுவனத்தின் செயல் அதிகாரி வேம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தகத்தை வெளியிட்ட பின் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:

தமிழ் மண்ணில் ஒவ்வொரு நகர்விலும் பாரதம் உள்ளது. பாரதத்தின் சிந்தனை உள்ளது. பாரத தேசம் எனும் சிந்தனையை ரிஷிகளும் சித்தர்களும் உருவாக்கினர். அனைத்தையும் ஒன்றே உருவாகியுள்ளது என்பது தான் வேதம். பாரதத்தின் அடையாளம் தமிழகத்தில் பிறந்துள்ளது. வாழ்வில் ஒரு முறையாவது காசி, ராமேஸ்வரம், துவாரகா, பத்திரி நாத், காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு செல்ல விரும்புகிறோம். நமக்கான சிந்தனை செயல்பாடுகளை சனாதன தர்மம் கொடுத்துள்ளது.

நாடு பிரிவினையை சந்தித்துள்ளது. வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களும், தெற்கு இந்திய பகுதியை சேர்ந்தவர்களும் சுதந்திரத்திற்கு செய்த தியாகத்தை மறக்க முடியுமா.? பிரிட்டன் சென்ற பிறகும் பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. தமிழகத்தின் உண்மையான கலாசாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள். கர்நாடக இசையில் ராமரை பற்றி தியாகராஜர் பாடினார். ஆழ்வார், நாயன்மார்கள் தமிழில் எவ்வளவோ பாடியுள்ளனர். மிஷனரிகள் மூலமாக தவறான பிரசாரம் ஏற்படுத்தப்படுகிறது. ராபர்ட் கால்டுவெல் எழுதிய புத்தகம் உண்மையை செல்லவில்லை. யார் இந்த கால்டுவெல் என மக்கள் கேட்கிறார்கள். கால்டுவெல் படித்தது வேறு, எழுதியது வேறு.

தமிழ் மக்களின் கலாசாரத்தை அடையாளத்தை கால்டுவெல் போன்ற மிஷனரிகள் அழிக்க முற்பட்டனர். காலனி மனப்பான்மையை தமிழ் மக்களின் மனதில் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள கோபுரம் பொலிவின்றி காணப்படுகிறது. ரங்கம் கோயில் கோபுரம் வண்ணமயமாக உள்ளது. ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் வண்ணபூச்சு இல்லாமல், மஞ்சள் வண்ணத்தில் பூசப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே கால்டுவெல் பற்றி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மீண்டும் அவர் சர்ச்சைக்குரியவகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post தமிழ் மக்களின் கலாச்சாரத்தை கால்டுவெல் போன்ற மிஷனரிகள் அழிக்க முற்பட்டனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Caldwell ,Governor RN ,Ravi ,Chennai ,Governor ,R.N. Ravi ,M.L. Raja ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...