×

போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.39 லட்சம் மோசடி: அடகு கடை உரிமையாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.39 லட்சம் ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட கோரி, அடகு கடை உரிமையாளர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஹைதர் கார்டன் பகுதியை சேர்ந்த அடகு கடை உரிமையாளர் ராம்பால் சோனி நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பெரம்பூர் நெடுஞ்சாலையில் நான், எனது தந்தையுடன் சேர்ந்து கடந்த 40 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறேன்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் எனது கடைக்கு வந்த, சீனி ஜாபர் அலி என்பவர், பல லட்சம் மதிப்புள்ள தனது நகைகளை, தாம்பரத்தில் உள்ள அடகு கடையில் குறைந்த விலையில் வைத்திருப்பதாகவும், அந்த நகைகளை ரூ.10 லட்சம் கொடுத்து மீட்டு, உங்கள் கடையில் வைத்திருங்கள். ஒரு வாரத்தில் அந்த பணத்தை கொடுத்து நகைகளை மீட்டு கொள்கிறேன் என்று கூறினார். அதன்படி நான் ரூ.10 லட்சம் கொடுத்து அந்த நகைகளை மீட்டேன். அந்த நகையின் மீது மேலும் நான் ரூ.2.39 லட்சம் கொடுத்தேன்.

பிறகு அவர் அடுத்தடுத்து நகைகளை எனது கடையில் அடகு வைத்தார். இதனிடையே, சந்தேகத்தின் பேரில், அவர் அடகு வைத்த நகைகளை சோதனை செய்த போது, அனைத்தும் போலி நகைகள் என தெரியவந்தது. பிறகு மீண்டும் என்னை தொடர்பு கொண்டு 200 கிராம் நகைகள் கொண்டு வரவதாக கூறினார். நான் அந்த நகைகளை கொண்டு வரும் போது போலீசாரிடம் பிடித்து கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி அவர் கடந்த 26.8.2023 அன்று 200 கிராம் நகையுடன் எனது கடைக்கு வந்தார்.

உடனே நான் போலீசாருக்கு தகவல் அளித்து சீனி ஜாபர் அலியை பிடித்து கொடுத்தேன். அதன்பிறகு ஓட்டேரி போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், பேரம் பேசி அடகு வைத்த போலி நகைக்கான பணத்தை கொடுத்துவிடுவதாக குற்றவாளியை அனுப்பி வைத்தனர்.

ஆனால் இதுவரை அடகு வைத்து நகைகான பணத்தை சீனி ஜாபர் அலி திரும்ப கொடுக்கவில்லை. அவர் மீது புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த நபர் மீது நான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஓட்டேரி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

The post போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.39 லட்சம் மோசடி: அடகு கடை உரிமையாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Police Commissioner ,Hyder Garden ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்