×

கும்மிடிப்பூண்டி பஜாரில் அரசு செவிலியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் அரசு செவிலியர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், லேப்டாப், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மின்வாரிய அலுவலகம் எதிரே ஒரு தனி வீட்டில் ராஜலட்சுமி(58) என்பவர் வசித்து வருகிறார். இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக வேலைபார்த்து வருகிறார்.

மேலும், இவர் கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து தனது மகன், மருமகள் மற்றும் உறவினர்களுடன் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளார். இதனால் ராஜலட்சுமியின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்துள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை பூட்டியிருந்த ராஜலட்சுமியின் வீட்டுக்கு உறவினர் சத்தியநாராயணன் திடீரென பார்வையிட சென்றுள்ளார்.

அப்போது ராஜலட்சுமியின் வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜலட்சுமிக்கு உறவினர் சத்தியநாராயணன் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ராஜலட்சுமியின் அறிவுறுத்தலின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு உறவினர் சத்தியநாராயணன் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் கும்மிடிப்பூண்டி போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும், ராஜலட்சுமியின் புகாரின் பேரில் போலீசார் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், அவரது வீட்டுக்குள் இருந்த பீரோவை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்திருப்பது தெரிய வந்தது. மேலும், அந்த பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம், ஒரு லேப்டாப் மற்றும் ஒரு செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராஜலட்சுமியின் வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், அந்த வீட்டில் இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, ராஜலட்சுமி வீட்டின் பின்பக்க பகுதிவரை சென்றது. இந்த புகாரின் அடிப்படையில், கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, நகைகள் கொள்ளையடித்த மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், பாதிரிவேடு ஆகிய காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக அதிகளவில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களில் எத்தனை காவலர் பற்றாக்குறை உள்ளது என்பதை கணக்கீடு செய்து, அங்கு காலி பணியிடங்களில் போதிய காவலர்களை பணியமர்த்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட எஸ்பி ஆகிய இருவரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி பஜாரில் அரசு செவிலியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Kummidipoondi ,Kummidipoondi Municipal Electricity Board ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!