×

புழல் சிறை கைதிகளிடம் 3 செல்போன் பறிமுதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம்: புழல் சிறையில் சோதனை நடத்தி, 3 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் மத்திய சிறையில் விசாரணை பிரிவு, தண்டனை பிரிவு, மகளிர் பிரிவு உள்ளன. இங்கு, சுமார் 200 பெண்கள் உள்பட 3500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

தண்டனை சிறை, விசாரணை சிறைகளில் அடிக்கடி செல்போன்கள், கஞ்சா நடமாட்டம் இருப்பதாக பல நேரங்களில் சிறை காவலர்கள் சோதனை நடத்தி செல்போன்களையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தண்டனை சிறையில் உள்ள விளையாட்டு அரங்கம் பின்புறம் போலீசார் சோதனை செய்தபோது, அங்கு ஒரு செல்போன், சார்ஜர், சிம் கார்டு ஆகியவை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணை சிறையில் சோதனை செய்தபோது, சிறையில் உள்ள கைதிகள் யூடியூப் கார்த்திக், விக்னேஸ்வரன், சதீஷ், சூர்யா, விஜயரங்கன், பிரசாந்த், தீனா, சுரேஷ் ஆகிய 8 பேரும், 2 செல்போன்களை வைத்து பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், 2 சார்ஜர்கள், 2 சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர், இதுகுறித்து சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறையில் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தும் தடை செய்யப்பட்ட செல்போன் மற்றும் போதைபொருட்கள் எப்படி செல்கிறது, சிறை காவலர்கள் உடந்தையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புழல் சிறை கைதிகளிடம் 3 செல்போன் பறிமுதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Kanchipuram ,Puzhal Central Jail ,Dinakaran ,
× RELATED நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14...