×

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் ஆதார் பதிவுக்கு வழிகாட்டு நெறிமுறை: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது

சென்னை: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் ஆதார் எண் பெறும் வகையில் பள்ளிகளில் ஆதார் மையங்கள் உருவாக்குவது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆணை பிறப்பித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு்ள்ளது. அதன்படி,

* ஆதார் பதிவு மேற்கொள்வதற்கான பதிவாளராக மாநில திட்ட இயக்குநர் செயல்படுவார்.

* தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஆதார் தரவு உள்ளீட்டாளர்கள் மேற்கொண்டுள்ள பதிவுகளுக்கான சேவைக் கட்டணத்துக்கான கேட்பினை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு அனுப்பி உரிய தொகையை பெற்று வழங்குவார்.

* கல்வித் தகவல் மேலாண்மை தளத்தில் உள்ள புதிய ஆதார் பதிவு செய்யப்பட வேண்டிய மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டிய குழைந்தைகளின் விவரங்களை, மாவட்டங்கள் வாரியாக பள்ளிகளின் எண்ணிக்கை கண்டறிந்து பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம், தனியார் பள்ளி இயக்ககங்களிடம் வழங்கி பள்ளிகளில் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை உறுதி செய்வார்.

* தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் பொறுப்புடையவராவார். பள்ளிக்கு ஆதார் தகவல் உள்ளீட்டாளர்கள் வருகை தரும்போது அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை செய்ய வேண்டும்.

* 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான பதிவு, 6-7 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டாய பயோ மெட்ரிக் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், 7வயதுக்கு மேற்பட்ட மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோ மெட்ரிக் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் , 15வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றை எந்தவித கட்டணமின்றியும், மாணவர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் ஏற்படுத்திக் கொடுப்பது தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் பொறுப்பு.

* ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளும் பணி, அந்தந்த பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் மேற்பார்வையில் உள்ள அறையிலேயே மேற்கொள்ள வேண்டும்.

* ஆதார் எண் பெற்ற பிறகு அதன் விவரங்கள் உடனடியாக இஎம்ஐஎஸ் இணைய தளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும். மேற்கண்டவை உள்பட 14 பக்கம் கொண்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் ஆதார் பதிவுக்கு வழிகாட்டு நெறிமுறை: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Department of Education ,Chennai ,School Education Department ,Principal Secretary ,Kumaraguruparan ,Aadhaar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில்...