×

2014 ல் பா.ஜ ஆட்சி அமைத்த பிறகு 121 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை: சரத்பவார் குற்றச்சாட்டு

புனே: பா.ஜ ஆட்சிக்கு வந்த பிறகு 121 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத்பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சரத்பவார் கூறியதாவது: கடந்த 2005ம் ஆண்டு மற்றும் 2023ம் ஆண்டுக்கு இடையே அமலாக்கத்துறை 5806 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் 25 வழக்குகள் மட்டுமே முடித்து வைக்கப்பட்டுள்ளது.

0.42 சதவீத வழக்குகள் மட்டுமே தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. தண்டனை சதவீதம் 0.40. 2022ம் ஆண்டு அமலாக்கத்துறையின் பட்ஜெட்டானது ரூ.300கோடியில் இருந்து ரூ.404 கோடியாக அதிகரித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இல்லை. ஆனால் 2014க்கு பிறகு ஒரு பாஜ தலைவர் கூட அமலாக்கத்துறையால் கேள்வி கேட்கப்படவில்லை. பாஜ அரசின் கீழ் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்பதை இந்த புள்ளி விவரங்கள் எழுப்புகின்றன. அமலாக்கத்துறை பாஜவின் ஆதரவு கட்சியாக மாறியுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி நடந்து கொண்டிருக்கும்போது, ​​நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று வேட்பாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவது கவலையளிக்கிறது. இதில் 2014ல் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு முதல்வர், முன்னாள் முதல்வர், 14 முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 121 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜவை சேர்ந்த யாரிடமும் அமலாக்கத்துறை இதுவரை விசாரணை நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

The post 2014 ல் பா.ஜ ஆட்சி அமைத்த பிறகு 121 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை: சரத்பவார் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Sharad Pawar ,Pune ,Enforcement Directorate ,Nationalist Congress Party ,Nationalist Congress ,SP ,Pune, Maharashtra ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் மாற்றம் உருவாகிவிட்டது...